புதன், 8 ஏப்ரல், 2009
கடமை, கண்ணியம், கட்டுப்பாடு;
பதறாதே! அரசியலில் குதிக்க வில்லை ;
உன்னை தினமும் பார்ப்பதே என் கடமை;
உன்னை மட்டுமே ரசிப்பதே என் கண்ணியம்;
உன்னை எப்போதும் நினைப்பதே என் கட்டுப்பாடு;
ஆம், எனது கொள்கையும்
கடமை, கண்ணியம், கட்டுப்பாடு;
இப்போது நான் பேரறிஞரின் தொண்டன் தானே;
வெள்ளி, 3 ஏப்ரல், 2009
மறக்க நினை !!!
மறந்துவிடு !
வினாவின் விடையை அல்ல ,
வாழ்வின் வலியை !
தோழனின் தோழமையை அல்ல ,
எதிரியின் துரோகத்தை !
எதிரி என்பவன் வாழ்வில் எதற்கு ?
அவனை மறந்து விடு,
அல்லது அவனது துரோகத்தை
மன்னித்து , மறந்து விடு
இரண்டில் ஒன்றே நன்று !
தோல்வியுற்ற காதலின் நினைப்பெதற்கு ?
அதனை வென்று விடுவோம்,
வாழ்வில் கடந்து வருவோம்;
நீ கண்ட தோல்வியின்
வலியை மறந்து விடு ,
அதனை வெற்றியின்
களிப்பாக்க விரைந்து விடு !
மண்ணாசையினை மறந்து விடுவோம்,
ஆறடி நிலம் நமக்கு இருக்கு;
நமக்கு தேவை என்ற அனைத்தையும்
ஆசை படுவோம், ஆனால்
பேராசையினை மறந்து விடுவோம் ;
மறப்பதை நினைவில் வைப்போம் !
திங்கள், 30 மார்ச், 2009
நாம் கடவுள் !!!
கடவுளே இல்லை ! என்று உரைக்க
நான் நாத்திகன் இல்லை ;
மூட நம்பிக்கைகளால் மூழ்கி
முடங்க நான் முட்டாள் இல்லை ;
கடவுள் என்பது நம்முள் உள்ள நம்பிக்கை;
அதனை நம்பிக்கையுடன் கண்டனர் சிலர்,
கண்களை மூடி மூட நம்பிக்கைகளால்
சிக்கினர் சிலர் ,
நம்பிக்கை தேவை இல்லை,
தன்னம்பிக்கை போதும் என்றனர் சிலர்;
நாத்திகனோ ! ஆத்திகனோ !
நம்மை வெல்ல கூடிய சக்தி இருப்பது உண்மை ;
நம் மனசாட்சியாக கூட இருக்கலாம்;
அதை பற்றி ஆராய நான் சித்தன் இல்லை ;
நம்பிக்கை ஓர் ஆயுதமே , ஆம்
நல்லவை புரியவும் தீயவை செய்யவும்
துணை நிற்பது நம்பிக்கை ,
அதனை பெற்றிருந்தால்
நாமும் கடவுளே !
செவ்வாய், 17 மார்ச், 2009
பெண்
கண்டுவிட்டனர் மூடர்கள் ;
பெண் அழுவதற்கே பிறந்தவள் !
என்றனர் மடையர்கள் ;
உண்மையில் அவள் ஆளப் பிறந்தவள் !
பெண் சிசு பெறுவதை சாபம்
என்ற கிறுக்கனுக்கு தெரியாது, அது வரம் என்று ;
பெண் பொறுமை பெற்றவள் ,
அதனாலே பெருமை அவளுக்கு !
அதை மறப்பதால் சிறுமை சிலருக்கு !
வெள்ளி, 13 மார்ச், 2009
சென்னையில் ஓர் மழைக் காலம்
தேவைக்கேற்ப பெய்வதில்லை ;
உன்னை கண்டதும் பேராந்தம் ;
நீ வந்து அன்றாட வேலையில் மந்தம் ;
நீ அளவில் மீறி விட்டால் ,
சாலைகள் சாக்கடை ஆனது ;
ஊழியர்களின் சாலை பணி
மெத்தனமும் வெளி யானது ;
தேவை அற்றதும் மிதந்தது நீ தேங்கியதால் ;
விந்தை இல்லை ,
சென்னை யின் மழைக் காலத்தில் !
ஆம்! இதுவே மழையின் பிழைக் காலம் !
வியாழன், 12 மார்ச், 2009
கட்டளை
மலரின் மீது அமர்ந்தாய்,
வெகு நேரம் இருந்துவிடாதே,
வலி எடுத்துவிட போகிறது மலருக்கு,
என்னவள் அழகுக்கு, அழகு சேர்க்க
மலரை பறிக்க சென்றேன்;
அதன் அழகில் லயித்தவன்,
அடிமை ஆனவன்,
அத்தோட்டத்தின் காவலன் ஆனேன் !
மகரந்த சேர்க்கைக்கு,
நீயும் ஒரு காரணகர்த்தா !
அதற்கே உனக்கு இச்சலுகை ;
அமர்ந்து கொள், ரசித்துக் கொள்,
அதன் அழகினை !
இது ஓர் ரசிகனின் அன்புக்கட்டளை !
புதன், 11 மார்ச், 2009
உறுப்புகளின் உறுத்தல்கள்
உன்னை தேடி அலைந்தது என் கண்கள் ;
நீ என்னை கண்டதும் ஓடி ஒளிய துடித்தது
என் கால்கள் பயந்து அல்ல, மறைந்து ரசிக்க ;
உன் பெயரையே உச்சரித்தது என் உதடுகள் ,
உன்னிடம் காதலை சொல்லாமல் ;
இசைக்கே இசைந்திடாத என் செவிகள் ,
உன் உதடுகளில்,
ஏதேனும் சத்தம் வெளிப்படாதா என்று ஏங்கியது ;
உன் பாதங்கள் நடந்தே நோகும் என்று ,
உன் பாதங்களை தாங்க துடிக்கிறது என் கைகள் ;
என் காலம் முழுவதும், உன்னுடன்
நடப்பதையே எண்ணுகிறது என் பாதங்கள்;
என் இதயமோ இவ்வனைதுக்கும் மேல்,
ஆம், உன்னை தவிர வேறெதையும்
ஏற்காமல் வெற்றிடம் ஆனது ;
உறுப்புகள் இப்படி உறுத்திக் கொண்டிருக்க,
இவை எதையும் சிந்திக்காமல், உன்னையே
எண்ணி செயலிழந்து கிடக்கிறது என் மூளை ;
