திங்கள், 27 செப்டம்பர், 2010

நிலவை பிடித்தேன் !!!

பயமறியா வயதினில்,
நிலவே உன்னை பின்தொடர்ந்து
எந்தன் வீட்டினில் சேர்த்து அனைப்பேன் ; ஆனால்
ஆதங்கப்பட்ட ஆதவன் உதித்து
உன்னை பறித்து கொள்வான் ;
சற்று வருந்துவேன் மீண்டும்
மாலை வரும் வரையினில் ;
இனி வருந்தப் போவதில்லை ,
நிலவு எனை பிரியப் போவதில்லை ;
மனையாளாய் எந்தன் மனை ஆள்கிறாள் !!!

புதன், 22 செப்டம்பர், 2010

அளவுகோல்

அளவுக்கு மிஞ்சிவிடில்

அமிர்தமும் நஞ்சாகுமே !

உந்தன் மீது நான் வைத்த

அளவினை கடந்த அன்பு

என்னுள் நான் என்ற

அகந்தையினை நசுக்கி விட்டது !

நான் வைத்த அன்பு

உந்தன் மேல் என்பதால்

அளவுகோலும் அளப்பதை மறந்தது !

செவ்வாய், 7 செப்டம்பர், 2010

மழையோடு ஓர் பொழுது !

என் வாழ்வினில் பல பொழுதுகள் ,
என்னவளுடன் எண்ணற்ற பொழுதுகள் ,
உன்னுடன் இந்த பொழுது !


அவளிடமும் சொன்னதில்லை
நீ தான் என் முதல் காதலி என்று,
கோவித்துக் கொள்வாள் கள்ளி ;


உங்கள் இருவருடனும் ஒரே சமயத்தினில்
காதல் செய்திட எண்ணிய ஆசை தீர்ந்தன ,
இந்த பொழுதினில் ;


உன் முதல் துளி
என்னை தழுவியதும் - மெய்சிலிர்த்தேன் ;
நானும் உன் பின்
வந்துவிடுவேனோ என்ற அச்சத்தினால்
அவளை மறந்து என் கை பிணைத்தாள்,
பிறகென்ன நானும் எனை மறந்தேன் ;

நீ என் மேனி தழுவ ,
அவள் அன்பு என் உள்ளம் தழுவ ,
விலை மதிப்பில்லா பொழுதின் சொந்தக்காரன் ,
கர்வத்தில் கர்ஜித்து ,
வினாடியும் வீணடிக்க விருப்பமில்லை ,


ஓர் குடையினில் கீழ் நடந்திருந்தால்
கவனம் சிதறி இருக்கும் , மழை துளி
அவள் மேல் படாமல் தடுப்பதில் ;


நான் ரசித்தவள் எனை அணைக்க ,
நான் நேசித்தவள் என் கை பிணைக்க ,
எங்கள் பாதங்கள் நடை பயின்றன !


இதே நொடி என்றாவது கிடைக்கலாம் ,
கிடைத்த இந்த நொடி எனக்கான பரிசு ,
பொக்கிஷம் என்று உயர்த்தி இருப்பேன் - ஆனால்
அது வாழ்வில் ஒரு முறை கிடைப்பது !


பல பொழுதுகளை ஏங்கும் நெஞ்சத்துடன்
விடை கொடுக்கிறேன்
நீ மீண்டும் வருவாய் என !

ஞாயிறு, 15 ஆகஸ்ட், 2010

வேட்கை

சுத‌ந்திர‌ம் அடைந்திட்ட‌ வேட்கை கண்டிலேன்;
குதூக‌ள‌ம் அடையும் வேடிக்கை காண்கிறேன்;
வேட்கை விடுத்து வேடிக்கை தேடிடும் இக்கால‌ம்,
வேடிக்கைக்கு இல்லை அக்கால‌ வேட்கை,
அக்கால‌ க‌ன‌வினை இக்கால‌த்தில் உழைத்திட்டு,
எக்கால‌மும் பொற்கால‌ம் ஆக்குவோம்;
இச்சுதந்திர‌ தின‌த்தில் வேட்கையை வேறூற்றுவொம்!

ஞாயிறு, 18 ஜூலை, 2010

தனிமை!

என்னை சுற்றி இருந்த
வெறுமை தான் தனிமையோ !
என்னை எனக்கு அறிய
வைத்த நிலைமை இனிமையே !

நினைத்ததை செய்தவனை
செய்வதை நினைக்க வைத்த அருமை !
எதையும் செய்யும் சுதந்திரம் ஆனால்
அதன் வெறுமை தருத்திரம் கொடுமை !

தனிமை வாழ்வினில் வரலாம்
ஒரு வேளையினில்- இடைவேளையிலே !!!

வியாழன், 15 ஜூலை, 2010

கொண்டாடுவோம் குதூகலிப்போம் !

யாதும் ஊரே யாவரும் கேளிர் ,

சொன்னது யாரு அதை புரிவது யாரு

நாம் மட்டும் அதை அறிந்தோமா

இல்லை புரிந்தோமா ?

ஆனால் வாழ்தோம்

கேளிக்கையுடன் கேளிராய் ,

சண்டை போட்டு சகோதரனாய்

சச்சரவுகள் இருந்தும்

நாம் மாமன் மச்சான்கள் !


கல்லூரி சாலையில் நாம்

கால் பதித்து,

எட்டு ஆண்டுகள் கழிந்தாலும்

எட்டு திக்கும் அதன் நினைவுகள்

மகிழ்ச்சியை வென்சாமரமாய் வீசுகிறது ;


நினைவுகள் நினைப்பதற்கே ,

சுகமான கல்லூரி நினைவுகளை

இந்நாளில் எந்நாளும் நினைத்து

கொண்டாடுவோம் குதூகலிப்போம்!

(ஜூலை , 15, 2002, நாங்கள் கல்லூரியினில் கால் பதித்த தினத்தின் கொண்டாட்ட சிதறல் )

வெள்ளி, 25 ஜூன், 2010

வல்லவன்

உம்மை யாம் பார்த்ததும் இல்லை,
உன்னுடன் பேசியதும் இல்லை ,
நீ பேச நான் கேட்டதும் இல்லை ;

என்னை உன் சிந்தனை கவர்ந்தது ,
உன் எழுத்துக்கள் வீழ்த்தியது ,

இன்று புலவன் என்பவரின்,
ஐயம் தீர்த்த ஐயன் நீ ;

எம் தாய் மொழி இன்று செம்மொழி
அதனை நன் மொழியாக்கியவன் நீ ;

நீ சொல்லிடாத தலைப்புக்கள் இல்லை ,
அதை புகழ்ந்திடாத நாவும் இல்லை ,
அதனை எதிர்திடும் சமயம் உண்டோ !

உன் எழுத்தின் சுவை அறிய ,
தமிழை அறிந்தனர் அறிஞர் பலர் ,
தமிழின் வலிமை ஏற்றிய வல்லவன் நீ,
உன்னை வள்ளுவன் என்பவன் நான் ;

நான் தமிழன் என்ற கர்வத்தை விட ,
நீவீர் தமிழன் என்பதில் பெருமை
கொள்ளும் சாமான்யன் ;

உன்னை பெருமைபடுத்த
நான் கூறும் வார்த்தை
உன் புகழின் முன் சிறுமையே !

இது உமக்கு என் சமர்ப்பணம் ,
என்றும் தமிழில் உண்டு
உனக்கு ஓர் சிம்மாசனம் !