சனி, 25 ஏப்ரல், 2009

உதயத்தால் அபாயம் ....

இன்னும் விடியவே இல்லை ,
ஆனால் நான் உன் தெரு முனையில்,
மறைவாக தான் !

கைலாயக் கதவுகளாக காட்சியளிக்கும்
உன் வீட்டுக் கதவுகள் திறந்தன ,
என் கண்கள் சற்று சிமிட்டின - ஆம்
நான் காணும் ஒளி நீயல்லவா !

உன் பாதம் படிந்தால் தான் மோட்சம்
என்று காத்திருந்த பூமி மகிழ்ந்தது ,
மிகவும் மகிழ்ந்தது ! ஆம் பூமியில்
விழுந்தது உன் கையில் பட்ட நீரல்லவா !

வாசலை அலங்கரித்தாய் உன்
சித்திரம் மூலம், உன் முகமான
பிரம்மனின் சித்திரத்தின் முன் உன்
சித்திரம் எடுபடாது ;

அட ! என்ன விந்தை
ஆதவனும் உன்னை காண உதிக்கிறானே!

மற்றவர்கள் அறியாமல் உன்னை ரசித்தேன் ;
என்னைக் காணும் முன் செல்கிறேன் ;

உதயத்தால் அபாயம் என் ரசனைக்கு ........

ஞாயிறு, 12 ஏப்ரல், 2009

தலைவன்

தலைவன் தலைதெறிக்க ஓடிக்

கொண்டிருந்தால் தொண்டர்களின்

தொண்டை தான் வறண்டு விடும் ,

ஆம் பின்பற்றுவதற்கு பின்னால் ஓடி ;



தலைவனுக்கு நிறம் எதற்கு ?

ஆயினும் நிதானம் நிரந்தரம் !



கடக்க வேண்டியவற்றைக் காட்டி

துவண்டு போகவிடாமல் பாதையினைக்

கடக்கும் வழிமுறையை தருபவனே தலைவன் !



தலைவன் பிறந்த நாள் கொண்டாடுவது

பரிசு பெறுவதற்கு இருக்க கூடாது ,

தனக்கு வயதாவதை சுட்டி காட்டி

அடுத்தவனை தலையெடுக்க செய்யவே !



தனக்கு பல அடிமைகளை

உருபெற செய்யாமல் தலைவர்கள்

பலரை உருவெடுக்க செய்பவன்

தலைசிறந்த தலைவன் !

மற்ற தலைமகன் எல்லாம்

தலைவன் இல்லை !



குறைகளை நிவர்த்தி செய்து ,

நிறைகளை நிலை நிறுத்தி ,

விழுதுகள் வேறாகும் போது

வேலியாய் இராம‌ல் வ‌ழிவிட்டு ,

தொண்டனை தோண்டிப் புதைக்காமல் ,

தோழனாகத் தோள் கொடுத்து,

தலைவன் ஆக்குபவனே - தலைவன் !

புதன், 8 ஏப்ரல், 2009

கடமை, கண்ணியம், கட்டுப்பாடு;

பேர‌றிஞ‌ரின் தொண்டன் ஆனேன் ;
பதறாதே! அரசியலில் குதிக்க வில்லை ;

உன்னை தினமும் பார்ப்பதே என் கடமை;
உன்னை மட்டுமே ரசிப்பதே என் கண்ணியம்;
உன்னை எப்போதும் நினைப்பதே என் கட்டுப்பாடு;

ஆம், எனது கொள்கையும்
கடமை, கண்ணியம், கட்டுப்பாடு;
இப்போது நான் பேர‌றிஞ‌ரின் தொண்டன் தானே;

வெள்ளி, 3 ஏப்ரல், 2009

மறக்க நினை !!!

மறப்பது நன்றே !
மறந்துவிடு !

வினாவின் விடையை அல்ல ,
வாழ்வின் வலியை !

தோழனின் தோழமையை அல்ல ,
எதிரியின் துரோகத்தை !

எதிரி என்பவன் வாழ்வில் எதற்கு ?
அவனை மறந்து விடு,
அல்லது அவனது துரோகத்தை
மன்னித்து , மறந்து விடு
இரண்டில் ஒன்றே நன்று !

தோல்வியுற்ற காதலின் நினைப்பெதற்கு ?
அதனை வென்று விடுவோம்,
வாழ்வில் கடந்து வருவோம்;

நீ கண்ட தோல்வியின்
வலியை மறந்து விடு ,
அதனை வெற்றியின்
களிப்பாக்க விரைந்து விடு !

ம‌ண்ணாசையினை மறந்து விடுவோம்,
ஆறடி நிலம் நமக்கு இருக்கு;

நமக்கு தேவை என்ற அனைத்தையும்
ஆசை படுவோம், ஆனால்
பேராசையினை மறந்து விடுவோம் ;

மறப்பதை நினைவில் வைப்போம் !