என் வாழ்வினில் பல பொழுதுகள் ,
என்னவளுடன் எண்ணற்ற பொழுதுகள் ,
உன்னுடன் இந்த பொழுது !
அவளிடமும் சொன்னதில்லை
நீ தான் என் முதல் காதலி
என்று,கோவித்துக் கொள்வாள் கள்ளி ;
உங்கள் இருவருடனும் ஒரே சமயத்தினில்
காதல் செய்திட எண்ணிய ஆசை
தீர்ந்தன ,இந்த பொழுதினில் ;உன் முதல் துளி
என்னை தழுவியதும் - மெய்சிலிர்த்தேன் ;
நானும் உன் பின்
வந்துவிடுவேனோ என்ற அச்சத்தினால்
அவளை மறந்து என் கை பிணைத்தாள்,
பிறகென்ன நானும் எனை மறந்தேன் ;
நீ என் மேனி தழுவ ,
அவள் அன்பு என் உள்ளம் தழுவ ,
விலை மதிப்பில்லா பொழுதின் சொந்தக்காரன் ,
கர்வத்தில் கர்ஜித்து ,
வினாடியும் வீணடிக்க விருப்பமில்லை ,
ஓர் குடையினில் கீழ் நடந்திருந்தால்
கவனம் சிதறி இருக்கும் , மழை துளி
அவள் மேல் படாமல் தடுப்பதில் ;
நான் ரசித்தவள் எனை அணைக்க ,
நான் நேசித்தவள் என் கை பிணைக்க ,
எங்கள் பாதங்கள் நடை பயின்றன !
இதே நொடி என்றாவது கிடைக்கலாம் ,
கிடைத்த இந்த நொடி எனக்கான பரிசு ,
பொக்கிஷம் என்று உயர்த்தி இருப்பேன் - ஆனால்
அது வாழ்வில் ஒரு முறை கிடைப்பது !
பல பொழுதுகளை ஏங்கும் நெஞ்சத்துடன்
விடை கொடுக்கிறேன்
நீ மீண்டும் வருவாய் என !