புதன், 23 டிசம்பர், 2009

நினைத்தாலே இனிக்கும் !

ஈசனின் விளையாட்டால்
பாண்டியனுக்கு கிடைத்த பாக்கியமும்
எனக்கு கிடைக்கவில்லை உன்னாலே,
உன் நாணத்தால் !

உன் கூந்தலின் மணத்தை நுகர்ந்ததில்லை
ஆனால் உன் கூந்தல் என்னை உணர்ந்தது
வாயு பகவானின் திருவிளையாட்டால் !

உட்புற ஆடைகளே மேலாடையாகும்
இக்காலத்திலும் உன் தாவணி
என்னை தழுவிய போது
என் இதயமும்
என்னிடம் இருந்து நழுவியது !

காதல் என்ற பெயரால்
காண்போரை முகம் சுளிக்க
செய்யும் சிலரும் உளர் ;
உன் நிழலுடன் உறவாடவே
எனக்கு அனுமதி அளித்தாய்
சற்று தயங்கியே !

நானும் பல பெண்களை கண்டதுண்டு
சிலரே அதில் கண்ணில் பதிந்தனர் ,
நீ ஒருத்தியே என் நெஞ்சில் நிறைந்தாய் ;

உன்னை கண்ட நொடியின்
நினைவுகளை என்றுமே
நினைத்தாலே இனிக்கும் !!!

செவ்வாய், 1 டிசம்பர், 2009

சுயநினைவோடு சுயனலமானேன் !!

உன் அழகால் உன்னிடம்
நான் வீழ்ந்தேனா ?
இல்லை உன் முகம்
கண்டு வியந்தேனா ?

நீ யாரென்று அறிவதில்
ஓர் ஆனந்தம் !
அதை அறிந்தவுடன்
நெஞ்சினில் பேரானந்தம் !

என் கால்கள் விரைந்தன
உந்தன் இடம் தேடி ;
என் இதயம் துடிக்கிறது
உன் நெஞ்சில் ஓர் இடம் நாடி !

நடக்கும் உன் பாதையில்
மலர் தூவ துடிக்கிறது - என் கரங்கள் ;
மஞ்சமாக தவிக்கிறது - என் நெஞ்சம் !

தாலாட்டி சீராட்டி உன்னை
கொஞ்சிடும் தாயாகவும் ,
உன் மடிமீது விளையாடி
நீ கொஞ்சிடும் சேயாகவும் ,
ஆக தான் உயிர் துடிக்குதம்மா !!

நண்பன் என்று நெகிழவில்லை ,
காதலன் என்று கர்வம் கொள்ளவில்லை ,
கணவனாக கனவு காண்கிறேன் ;

என்றாவது நீ கிடைப்பாய் என்றில்லை ,
என்றுமே நீ எனக்கே ! என்றே
கனவு கண்டு சுயநினைவோடு சுயனலமானேன் !!

செவ்வாய், 24 நவம்பர், 2009

நாமும் மனிதர்கள் !

முகத்தின் முன் கை கட்டி,
முதுகின் பின் கை நீட்டி ,
யாசகமாய் வரும் மரியாதை ,

தோழமை என்று சொல்லி
தோளிலே கை போட்டு
கழுத்தினை நெரிக்கும்
நட்புக்கு சமம் ,

கற்பில்லா நடப்பும் ,
நேர்மையில்லா மரியாதையும்
இருந்தென்ன பயன் ?

நட்பு இல்லாவிட்டால் தவறேதுமில்லை
நாமும் மனிதர்களே !
ஆனால் அன்புடன் இருக்க வேண்டும்
நாமும் மனிதர்கள் என்று
நிரூபிக்கவே !

அன்புடன் பழகி ,
ஆதரவாய் இருப்போம் !

வாழ்க மனித நேயம் !

செவ்வாய், 17 நவம்பர், 2009

உழைத்திடுவோம் , உயர்ந்திடுவோம் !!!

நேற்று போல் இன்று இல்லை

என்று வியந்தேன் !

இன்று போல் நாளை இருப்பதில்லை

என்பதை உணர்ந்தேன் !!

தடைகள் தடுமாற வைக்கும் ,

சிலர் நம்மை முதுகினில்

தட்டியும் கொடுப்பார்கள்;

தட்டியும் விடுவார்கள் !

முன்னேறி செல்வதே நம் நோக்கம் ;

ஒற்றை வாழ்வினை சற்றே

வாழ்ந்து தான் பார்ப்போமே !

வெற்றியின் களிப்பை நெஞ்சில் வைத்து

அதன் வேட்க்கையை என்றும்

நம் நினைவில் வைத்து

உழைத்திடுவோம் , உயர்ந்திடுவோம் !!!

செவ்வாய், 25 ஆகஸ்ட், 2009

வாழ்க்கையே கொண்டாட்டம்

எனக்கே என்னை பிடிக்கவில்லை;

உனக்கு என்னை பிடிக்கும் வரை !

வாழ்வில் என்ன செய்வது என்றிருந்தேன் ,

உன்னை காதலிக்க வைத்தாய் !



வாழ்வில் அழகை ஆராதிக்க ஆராய்ந்திருந்தேன் ;

பல்கலைக் கழகமாய் என்னை வந்தடைந்தாய் !

இனி ஆராய்ச்சி தான் எதற்கு ?

உன்னை ப‌டிப்ப‌தெத‌ற்கு பார்த்தே

தெரிந்து கொள்கிறேன் !



நான் கண்ட ஒரே பெண் நீ தான் !

என்று பொய் உரைக்க போவதில்லை ;

நானும் பலரை கண்டதுண்டு

காதலித்ததும் காதலிப்பதும் உன்னை மட்டுமே !



கொண்ட காதலினை நிரூபிப்பது கடினமே !

நான் செய்வேன் , என் வாழ்நாளினை

உன்னுடன் வாழ்ந்து கொண்டாடி !



ஆம் ! நீ என்னுடன் இருக்கையில்

அனுதினமும் கொண்டாட்டமே !!!



என் வாழ்க்கையே கொண்டாட்டம்,

கொண்டாடுகிறேன் !!!

வெள்ளி, 21 ஆகஸ்ட், 2009

ஏக்கம் !!!

என்னை பற்றியே சிந்திக்க
நேரம் இல்லாமல் அலைந்தேன் !
உன்னை சந்தித்தபின்
சிந்திக்க ஏதடி நேரம் ?
உன் நினைவுகள் புதைந்ததனால்
சிதைந்தது என் மூளை !

இன்றும் ,
என்னை பற்றியே சிந்திக்க
நேரம் இல்லாமல் அலைகிறேன் !
ஆம்! உன்னை சந்திக்கும் நேரம்
மறுபடியும் வராதா ?
என்று ஏங்கியே !

புதன், 5 ஆகஸ்ட், 2009

களவாடிய பொழுதுகள் !!!

சில சில்லறைகள் களவாடிய போது
பதறியது நெஞ்சம்,
சுற்றியுள்ள உலகத்தை நினைத்தே !
உன்னை களவாடி
என்னுள் வைத்த பின்
பதற்றம் ஏதடி ?
என் உலகம் நீயான பின் !!!

ஞாயிறு, 19 ஜூலை, 2009

அறிதல்

காதலித்தால் ,
உன்னை நீ அறிவாய் ;
தோற்றால் ,
வாழ்வையே நீ அறிவாய் ! ! !

செவ்வாய், 14 ஜூலை, 2009

நினைப்பதெல்லாம் நடப்பதில்லை !

காத்திருந்தேன் ,

காத்திருக்கிறேன் ,

காத்திருப்பேன் !

என்ற நம்பிக்கையில் தானோ,

நான் சிரித்த போது

முகம் காட்டாதவள்,

என் கல்லறையில் கண்ணீர் சிந்துகிறாள் !

நினைப்பதெல்லாம் நடப்பதில்லை !

வெள்ளி, 10 ஜூலை, 2009

வெற்றிடம்

என் கண்கள்,
உன்னை கொள்ளை கொண்டதும்
என் இதயம் வெற்றிடம் ஆனதே !
பதறவில்லை நீ நிரப்புவாய் என்பதால் ;

செவ்வாய், 9 ஜூன், 2009

பிரியா விடை !!!

சிற‌குக‌ள் முளைத்த‌த‌னால்
ப‌ற‌ந்து சென்றாயா ?
இல்லை சிக‌ர‌ம் தொட‌ தானே !
உன்னை பிரியும் போது
பெரிதாய் தெரிந்த‌ உல‌க‌ம் ...
உன்னை காண‌
எண்ணும் போது க‌டுகான‌தே...

செவ்வாய், 26 மே, 2009

காவல் தெய்வம்

காலணியும் காவல்
தெய்வமானது !
உன் கால்களை காப்பதால் !

ஞாயிறு, 3 மே, 2009

தூக்கத்தில் வீரநடை !

தூக்கத்தில் நடக்கிறேன் என்கின்றனர் !
அவர்களுக்கு என்ன தெரியும் ?
நான் தான் கண்களை
மூடிக் கொண்டிருக்கிறேன் ;
மூடிக்கொள்ள மூடனில்லை !
நான் கண்ட உன் உருவம்
நீங்கக் கூடாது என்பதற்காகத் தான் !

சனி, 25 ஏப்ரல், 2009

உதயத்தால் அபாயம் ....

இன்னும் விடியவே இல்லை ,
ஆனால் நான் உன் தெரு முனையில்,
மறைவாக தான் !

கைலாயக் கதவுகளாக காட்சியளிக்கும்
உன் வீட்டுக் கதவுகள் திறந்தன ,
என் கண்கள் சற்று சிமிட்டின - ஆம்
நான் காணும் ஒளி நீயல்லவா !

உன் பாதம் படிந்தால் தான் மோட்சம்
என்று காத்திருந்த பூமி மகிழ்ந்தது ,
மிகவும் மகிழ்ந்தது ! ஆம் பூமியில்
விழுந்தது உன் கையில் பட்ட நீரல்லவா !

வாசலை அலங்கரித்தாய் உன்
சித்திரம் மூலம், உன் முகமான
பிரம்மனின் சித்திரத்தின் முன் உன்
சித்திரம் எடுபடாது ;

அட ! என்ன விந்தை
ஆதவனும் உன்னை காண உதிக்கிறானே!

மற்றவர்கள் அறியாமல் உன்னை ரசித்தேன் ;
என்னைக் காணும் முன் செல்கிறேன் ;

உதயத்தால் அபாயம் என் ரசனைக்கு ........

ஞாயிறு, 12 ஏப்ரல், 2009

தலைவன்

தலைவன் தலைதெறிக்க ஓடிக்

கொண்டிருந்தால் தொண்டர்களின்

தொண்டை தான் வறண்டு விடும் ,

ஆம் பின்பற்றுவதற்கு பின்னால் ஓடி ;



தலைவனுக்கு நிறம் எதற்கு ?

ஆயினும் நிதானம் நிரந்தரம் !



கடக்க வேண்டியவற்றைக் காட்டி

துவண்டு போகவிடாமல் பாதையினைக்

கடக்கும் வழிமுறையை தருபவனே தலைவன் !



தலைவன் பிறந்த நாள் கொண்டாடுவது

பரிசு பெறுவதற்கு இருக்க கூடாது ,

தனக்கு வயதாவதை சுட்டி காட்டி

அடுத்தவனை தலையெடுக்க செய்யவே !



தனக்கு பல அடிமைகளை

உருபெற செய்யாமல் தலைவர்கள்

பலரை உருவெடுக்க செய்பவன்

தலைசிறந்த தலைவன் !

மற்ற தலைமகன் எல்லாம்

தலைவன் இல்லை !



குறைகளை நிவர்த்தி செய்து ,

நிறைகளை நிலை நிறுத்தி ,

விழுதுகள் வேறாகும் போது

வேலியாய் இராம‌ல் வ‌ழிவிட்டு ,

தொண்டனை தோண்டிப் புதைக்காமல் ,

தோழனாகத் தோள் கொடுத்து,

தலைவன் ஆக்குபவனே - தலைவன் !

புதன், 8 ஏப்ரல், 2009

கடமை, கண்ணியம், கட்டுப்பாடு;

பேர‌றிஞ‌ரின் தொண்டன் ஆனேன் ;
பதறாதே! அரசியலில் குதிக்க வில்லை ;

உன்னை தினமும் பார்ப்பதே என் கடமை;
உன்னை மட்டுமே ரசிப்பதே என் கண்ணியம்;
உன்னை எப்போதும் நினைப்பதே என் கட்டுப்பாடு;

ஆம், எனது கொள்கையும்
கடமை, கண்ணியம், கட்டுப்பாடு;
இப்போது நான் பேர‌றிஞ‌ரின் தொண்டன் தானே;

வெள்ளி, 3 ஏப்ரல், 2009

மறக்க நினை !!!

மறப்பது நன்றே !
மறந்துவிடு !

வினாவின் விடையை அல்ல ,
வாழ்வின் வலியை !

தோழனின் தோழமையை அல்ல ,
எதிரியின் துரோகத்தை !

எதிரி என்பவன் வாழ்வில் எதற்கு ?
அவனை மறந்து விடு,
அல்லது அவனது துரோகத்தை
மன்னித்து , மறந்து விடு
இரண்டில் ஒன்றே நன்று !

தோல்வியுற்ற காதலின் நினைப்பெதற்கு ?
அதனை வென்று விடுவோம்,
வாழ்வில் கடந்து வருவோம்;

நீ கண்ட தோல்வியின்
வலியை மறந்து விடு ,
அதனை வெற்றியின்
களிப்பாக்க விரைந்து விடு !

ம‌ண்ணாசையினை மறந்து விடுவோம்,
ஆறடி நிலம் நமக்கு இருக்கு;

நமக்கு தேவை என்ற அனைத்தையும்
ஆசை படுவோம், ஆனால்
பேராசையினை மறந்து விடுவோம் ;

மறப்பதை நினைவில் வைப்போம் !

திங்கள், 30 மார்ச், 2009

நாம் கடவுள் !!!

கடவுளே இல்லை ! என்று உரைக்க

நான் நாத்திகன் இல்லை ;

மூட நம்பிக்கைகளால் மூழ்கி

முடங்க நான் முட்டாள் இல்லை ;

கடவுள் என்பது நம்முள் உள்ள நம்பிக்கை;

அதனை நம்பிக்கையுடன் கண்டனர் சிலர்,

கண்களை மூடி மூட நம்பிக்கைகளால்

சிக்கினர் சிலர் ,

நம்பிக்கை தேவை இல்லை,

தன்னம்பிக்கை போதும் என்றனர் சிலர்;

நாத்திகனோ ! ஆத்திகனோ !

நம்மை வெல்ல கூடிய சக்தி இருப்பது உண்மை ;

நம் மனசாட்சியாக கூட இருக்கலாம்;

அதை பற்றி ஆராய நான் சித்தன் இல்லை ;

நம்பிக்கை ஓர் ஆயுதமே , ஆம்

நல்லவை புரியவும் தீயவை செய்யவும்

துணை நிற்பது நம்பிக்கை ,

அதனை பெற்றிருந்தால்

நாமும் கடவுளே !

செவ்வாய், 17 மார்ச், 2009

பெண்

பிறக்கும் போது அழுகும் குழந்தையினை

கண்டுவிட்டனர் மூடர்கள் ;

பெண் அழுவதற்கே பிறந்தவள் !

என்றனர் மடையர்கள் ;

உண்மையில் அவள் ஆளப் பிறந்தவள் !

பெண் சிசு பெறுவதை சாபம்

என்ற கிறுக்கனுக்கு தெரியாது, அது வரம் என்று ;

பெண் பொறுமை பெற்றவள் ,

அதனாலே பெருமை அவளுக்கு !

அதை மறப்பதால் சிறுமை சிலருக்கு !

வெள்ளி, 13 மார்ச், 2009

சென்னையில் ஓர் மழைக் காலம்

கேட்கும் போது வருவதில்லை ;

தேவைக்கேற்ப பெய்வதில்லை ;

உன்னை கண்டதும் பேராந்தம் ;

நீ வந்து அன்றாட வேலையில் மந்தம் ;

நீ அளவில் மீறி விட்டால் ,

சாலைகள் சாக்கடை ஆனது ;

ஊழியர்களின் சாலை பணி

மெத்தனமும் வெளி யானது ;

தேவை அற்றதும் மிதந்தது நீ தேங்கியதால் ;

விந்தை இல்லை ,

சென்னை யின் மழைக் காலத்தில் !

ஆம்! இதுவே மழையின் பிழைக் காலம் !

வியாழன், 12 மார்ச், 2009

கட்டளை

வர்ணங்கள் உனக்கா புதிது ? வண்ணத்துப்பூச்சியே !
மலரின் மீது அமர்ந்தாய்,
வெகு நேரம் இருந்துவிடாதே,
வலி எடுத்துவிட போகிறது மலருக்கு,
என்னவள் அழகுக்கு, அழகு சேர்க்க
மலரை பறிக்க சென்றேன்;
அதன் அழகில் லயித்தவன்,
அடிமை ஆனவன்,
அத்தோட்டத்தின் காவலன் ஆனேன் !
மகரந்த சேர்க்கைக்கு,
நீயும் ஒரு காரணகர்த்தா !
அதற்கே உனக்கு இச்சலுகை ;
அமர்ந்து கொள், ரசித்துக் கொள்,
அதன் அழகினை !
இது ஓர் ரசிகனின் அன்புக்கட்டளை !

புதன், 11 மார்ச், 2009

உறுப்புகளின் உறுத்தல்கள்

உன்னை தேடி அலைந்தது என் கண்கள் ;

நீ என்னை கண்டதும் ஓடி ஒளிய‌ துடித்தது

என் கால்கள் பயந்து அல்ல, மறைந்து ரசிக்க ;

உன் பெயரையே உச்சரித்தது என் உதடுகள் ,

உன்னிடம் காதலை சொல்லாமல் ;

இசைக்கே இசைந்திடாத என் செவிகள் ,

உன் உதடுகளில்,

ஏதேனும் சத்தம் வெளிப்ப‌டாதா என்று ஏங்கியது ;

உன் பாதங்கள் நடந்தே நோகும் என்று ,

உன் பாதங்களை தாங்க துடிக்கிறது என் கைகள் ;

என் காலம் முழுவதும், உன்னுடன்

நடப்பதையே எண்ணுகிறது என் பாதங்கள்;

என் இதயமோ இவ்வனைதுக்கும் மேல்,

ஆம், உன்னை தவிர வேறெதையும்

ஏற்காமல் வெற்றிடம் ஆனது ;

உறுப்புகள் இப்படி உறுத்திக் கொண்டிருக்க,

இவை எதையும் சிந்திக்காமல், உன்னையே

எண்ணி செய‌லிழ‌ந்து கிடக்கிறது என் மூளை ;

வியாழன், 26 பிப்ரவரி, 2009

ஏமாற்றிவிட்டேன் - நானில்லை

என்னை கரு கொண்டவள் கருவிலே
கரைத்திருந்தாலும் வலியினை அறிய
வாய்ப்பில்லை - அறியவா போகிறேன் !

காகிதத்தில் காதலைக் காண்பித்தேன் ;
காற்றிலே விட்டு கருக்கி விட்டாய், என் இதயத்தினை !

உயிர் துறக்க துணிந்திருப்பேன்,
வீரனல்லவா மனதினை மாற்றிவிட்டேன் ;

என்றாவது பருவமழை பொய்த்தால் ,
விவசாயி வியாபாரியில்லை - விளைச்சல் இல்லாததால் ,
வீணாகமாட்டான் நம்பிக்கை இருப்பதால் ;
நானும் தான் - நட்பு இருப்பதால் ;
பெற்றோரே என்னுயிர் தோழர்கள் ;

பெண்ணே !
காதலியாகத்தான் கொடுத்து வைக்கவில்லை ,
நட்புடனாவது பழகு ;
ஒரு நாளாவது உன்னை நினைக்க வைப்பேன் ,
என்னவென்றா ?
' ஏமாந்து விட்டாயடி ' என்று !!!

வியாழன், 19 பிப்ரவரி, 2009

நம்பிக்கையின் சுகம் !

காத‌லில் காத்திருப்ப‌தே சுக‌ம் ;என்ற‌

க‌ருத்தினைக் க‌ருவித்திருந்தேன் என்னுள்!

காத‌லில் காத்திருக்க‌லாம் ;

நானோ காத‌லிக்க‌க் காத்துக்கொண்டிருக்கிறேன்;

என் காத‌லை,நீ நிராக‌ரித்துவிட்டால்

சாக‌ மாட்டேன் ,ஆனால் வாழ்வ‌தெப்ப‌டி ;

நீ என்னைக் காத‌லிப்பாய் என்ற‌

ந‌ம்பிக்கையிலே வாழ்ந்து விடுவேன்,

இதுவும் சுக‌ம் தான் ;

புன்னகை பூவே !

இதயங்கள் இடமாறினாலும்

வெற்றிடம் ஆவதில்லை , ஊடல்கள்

இருப்பினும் உரிமை உடையாது ,

வார்த்தைகள் வ‌ராவிடினும் உத‌டுக‌ளில்

பூக்கும் புன்ன‌கை இருக்கும்,

காத‌ல் இருப்ப‌தால் !

ஞாயிறு, 8 பிப்ரவரி, 2009

விழுதுகள்

விழுந்தும் போற்றப்படுகிறாய்!

விழுதே !

உன்னை பற்றி விவாதம் ஏன் ?

குடும்பச் சூத்திரம் சூளுரைத்த

சூத்திரதாரி நீ !

பாரத்தினை வெறுப்பில்லாமல்

பொறுப்புடன் பெற்றோரிடமிருந்து

பெற்றுக்கொள்ளும் பக்குவத்தினை

பிள்ளைகளுக்கு கற்றுவித்தாய் !

நன்றி சொல்லத்தான் வார்த்தை ஏது !

விழுவதும் எழுவதற்கே,

என காட்டிய எடுத்துக்காட்டு !

வாழ்வினில் விழும் முதல் அடி ,

வெற்றியின் உந்துதல் படியே !

என்றுரைத்து, வாழ்க்கைச் சிற்பத்தை

சீர்ரமைத்துடும் உழி நீயே !

உன்னை பற்றி கூற நினைத்தேன் ,

பாராட்ட முற்பட்டேன் ,

இறுதியில் நன்றி தெரிவிக்கும்

வரிகள் குவிந்தன ;

தோழமை இலக்கணம் தந்த சிற்பியே !

வள்ளுவன் கூறிய கூற்றினை ஏற்று ,

நண்பனின் இடுக்கண் கலைந்திடும்

கடமையினை கற்பித்த ஆசானே !

ஆம் ! விழுதாய் இருக்கும் நீ ,

வேறு வழுவினை இழந்ததும் ,

வேறாய் உருவினை மாற்றி ,

வாழ்ந்து கொண்டிருக்கும் வேதம் நீ !

கற்கிறேன் நாளும் உன்னிலிருந்து

நன்றி தெரிவிக்க போவதில்லை கடமைபட்டுள்ளேன் ....

வியாழன், 29 ஜனவரி, 2009

நான் அறியாப் பாதை !


எங்கே செல்கிறது இப்பாதை ?
நான் அறியாத பேதை ;

தேடிச் செல்வதிலே தனிச் சுவை ,
வெற்றிக்கு அழியா முயற்சியே தேவை !

அறிவுச் சுடர் தான் வழிகாட்டும் ஒளி,
அறிந்த பின் இடை வராது வேலி !

பாதையை மறைத்தது மூடு பனி ,
தேவைகேற்ப பாதை அமைப்பதே நம் பணி !

இத்தருணத்தின் தேவை தொலை நோக்கு பார்வை ,
வெற்றி பாதை ஆக்கிட சிந்திடுவோம் நம் வேர்வை !

(Photo courtesy: CK)




வெள்ளி, 16 ஜனவரி, 2009

உத்தமர் தினம் !

அனைத்திலும் அனைவரையும்

அரவணைக்க தினங்கள் பல !

நாம் சோற்றிலே கை வைக்க ,

சேற்றிலே கால் வைக்கும் உத்தமர்களை ,

உள்ளம் நெகிழ வைக்க அவசியம் இல்லை ;

கள்ளம் கபடம் அற்ற உள்ளம் அது !

பிரதிபலன் எதிர் நோக்காத நெஞ்சம் அது !

விளைச்சல் நிலத்தினை வியாபார நலனுக்கு ,

சூட்சமமாக சூழ்ந்து கொள்ளும் நிலைமையில் ,

தன் உயிராய் நேசம் கொண்டு ,

விளையும் பயிரினை முளையும் போதே ,

கண்டறிந்து வளர்த்து ,

நமக்கு அளித்த விவசாய விஞ்ஞானி !

உன்னை உலகறிய உயர்த்தினாலும் ,

உனது உள்ளம் சூது வாது தெரியாது!

புகழ்ந்து பாடத்தான் செய்கிறோம் ,

கர்வம் ஏறாத மகான் ஐயா நீ !

நாட்டின் கலாச்சாரம் உன் நடையிலே !

நாட்டின் வளர்ச்சி உன் வியர்வை துளியிலே !

உன்னை வாழ்த்தாத புலவர் இல்லை !

உன்னை சார்ந்து இராத தலைவன் இல்லை !

உத்தமரே ! உன்னை வாழ்த்தவில்லை ,

வணங்குகிறோம் உழவர் தினத்தில் !

திங்கள், 5 ஜனவரி, 2009

எனக்கானவள் !

நீ கருப்பா ? சிவப்பா ?
நீ குள்ளமோ ? உயரமோ ?
எதுவும் தெரியாது ;
நான் அறிந்தது
நீ எனக்கானவள் ;
உன்னை விட்டு தர தயார் ,
நான் உயிர் விட்ட பின் ;

நீ என் கை பிடித்து நடக்க
வாழ்க்கையில் கை பிடித்தாய் ;
நானோ ! நீ கை பிடித்துள்ள
நம்பிக்கையில் நடக்க உள்ளேன் ;
உறவுகள் பல விதம் ;
உறவு என்று வந்து உயிரில் கலந்து
என் உயிர் ஆக போகிறவள் நீ ;

நீ யாரென்று எனக்கு தெரியாது ;
என் உயிராக போகிறவள் நீ ,
என் கனவெல்லாம் நீயே !
உருவம் தெரியாது, பிறகு
கனவு எப்படி என்றால் ?
உருவம் இல்லை உணர்வு தான் ;

என்றும் எனக்கே என்றாக போகிறவள் ,
என்றாவது கிடைப்பாளா ? என்று ஏங்கவில்லை !
என்றானாலும் நீ எனக்கே என்ற
நினைவில் நனைகிறேன் !

என்னவளே ! நீ என்றும் எனக்கானவள் !

வியாழன், 1 ஜனவரி, 2009

புத்தாண்டு

புத்தாண்டு வந்தது, புது தெம்பும் வந்தது ;
குதூகலம் தொடர்ந்தன , உணர்ச்சிகள் உருவெடுத்தன ;
எதிர்ப்புகள் இல்லாத எதிர்பார்ப்பு வளர்ந்தது ;
இலக்குகள் இதமாக தெரிந்தன ;
முதல் நாள் முடிந்து, வருடம் தொடங்கியது ;
நாட்கள் நகர்ந்தது, மாதங்கள் மலர்ந்தது ;
முன்னேற்றங்கள் தள்ளாட்டங்கள் பகிர்ந்தன ;
பக்குவம் வளர்ந்தது , புத்தாண்டு தின
உறுதி மொழிகள் கனவுகள் ஆனது ;
இதோ டிசெம்பரும் வந்தது ,
இத்தனை நாட்கள் நிமிடமாக கடந்தது ;
இம்மாதம் நொடியென கடப்பதில் ஐயம்யேது !
ஆம் , அடுத்த வருடம் துவங்கும் நேரம் ,
உறுதி மொழிகளை உறுதியுடன் ஏற்க தயார் ,
புதிய எதிர்பார்ப்புடன் புதிய வருடம் ஏற்க தயார் ,
பகிர்ந்தது புத்தாண்டு வாழ்த்துக்கள் ,
புத்தாண்டு வந்தது, புது தெம்பும் வந்தது !