செவ்வாய், 27 மே, 2008

சிந்தனை கசியட்டும்

முட்கள் இல்லாத ரோஜாவினை

இவ்வுலகம் நம்பாது; கஷ்டங்கள்

வாழ்க்கையில் வராமல் இராது ;

முட்களுக்கு பயந்தால் ரோஜாவின்

அழகினை அனுபவிக்க முடியுமா ?

துன்பங்களுக்கு துவண்டுவிட்டால்

சுவாசிப்பது எதற்கு ?

சிந்தனை கசியட்டும் லாபம்

சுலபமா வருமா ?

முயற்சிப்போம் முன்னேறுவோம் !!!

எண்ணம்

நிஜங்களை நிழலென நிராகரித்தேன் ;
உண்மையினை உதாசினம் செய்தேன் ;
சிலைகளும் சிரிப்பதாக சிலிர்த்தேன் ;
என்னை நானே அறிய முற்படுகிறேன் ;
மாற்றத்தை எதிர் கொள்கிறவன் , என்னுள்
மாற்றத்தை உணரத் தொடங்கினேன் ;
கேட்பார் பேச்சைக் கேட்காதவன்
பிறர் கேட்குமாறு அறிவிக்கிறேன் - என் காதலை
உனக்கும் கேட்கும் என்று எண்ணியே !!!

ஞாயிறு, 25 மே, 2008

ரசனை

கடும் பாறையினை குடைந்து

தண்ணீர் எடுக்கும் தன்னம்பிக்கை

உள்ளது என்னிடம் !

ஏனோ தெரியவில்லை உன்

கண்ணில் காதல் உள்ளதா ?

என்பதை அறிவதற்கு தயக்கம்

இருக்கத் தானே செய்யும் ;

தண்ணீர் கிடைக்கவில்லை என்றால்

இடமாறிவிடுவேன் ; காதல் இல்லை

என்றால் இடிந்துவிடுவேன் ;

உன்னுடன் வாழாவிட்டாலும் நீ

வாழ்வதை ரசித்தாவது வாழ்ந்துவிடுகிறேன் !!!

பொழுதுபோக்கு

பொழுதினை போக்கவே சில

பிழைகளுடன் கவிதையாக கிறுக்குகிறேன் !

இதனை அறிந்ததும் கேட்கின்றனர்

நான் காதலிப்பது யாரையென்று ?

நான் காதலிப்பது காதல்

என்றால் ஏற்கவா போகிறார்கள் !

வருந்தப் போவதில்லை !

நான் அவர்களுக்காக வாழவில்லை !!!

மந்திரம்

நேரத்தை நேர்த்தியாக நகர்த்தியவன்

நீ என் கண்ணில் நிறைந்த பிறகு

கண்கள் இமைக்க மறந்தன - ஆம் !

இமைக்கும் நேரத்தில் உன்னைப்

பார்க்க முடியாதே ! உனது பெயர்

பணம் என்பதால் தான் பிணமும்

மனம் மாறுகிறதோ !

பணமே ! உன்னையும் பிணமாக்கும்

மந்திரமே - பெண் !!!

சனி, 24 மே, 2008

காணிக்கை

நினைத்தை முடிப்பவன் நான் !
என்று மார்தட்டி கொண்டிருந்தேன் ;
அனைத்திற்கும் முடிவு உண்டு என்பதை
உணர்த்திய நாள் - ஆம்
நான் உன்னை கண்ட நாள் !
யாரையுமே காதலிக்க மாட்டேன்
என்றிருந்த என்னுள் காதல் நெருப்பை
மூட்டிவிட்டாய் ; நெருப்பிருந்தால் புகையுமே !
காதலால் சரணடைய செய்தாய் உன்னிடம்
சவாலை சமாளிப்பேன் ; காதலைக்
காணிக்கை ஆக்குவேன் - என் காதலியிடம் !!!

ஆச்சரியம் .....

உலகினை மயக்கும் அழகு
இல்லை உன்னிடம் - ஆனால்
என்னை மயக்கினாய், உன் அழகில் !
உனது குரல் என்ன குயிலின்
இனிமையா ? நிச்சயம் இல்லை
ஆனால் என்னை வசீகரித்து விட்டதே !
காதலிக்க ஏற்றவளா நீ ?
என்ற கேள்வி மட்டும் கேட்க மாட்டேன் !
காதலுக்கு கண்ணில்லை யாம் அறிவோம் !
கவிஞர்கள் உன்னை கவிதையாய்
எழுத நினைப்பார்களா ? ஆனால்
உன்னை நினைத்து தான் இவற்றை
எழுதினேன் !!! என்ன ஆச்சரியம் .....

வெள்ளி, 23 மே, 2008

முயற்சி

கருவறையில் இருந்து கரையாமல்

காத்து பூமியில் விட்டனர் ;

கல்லறைக்கு போகும் முன்

கற்க முயற்சிக்கிறேன் !

அறிவுரைக்கவில்லை வலியுறுத்துகிறேன் ;

முதுகினில் தட்டி கொடுக்கா விட்டாலும்

தட்டி விடாதீர் !

வியாழன், 22 மே, 2008

அன்புடன்

மறப்போம் ! மன்னிப்போம் !

என்று அறிவுரைத்தனர் ,

மன்னித்தால் தானே மறப்பதற்கு

என்று வாதிடுகின்றனர் !

மன்னித்து விடின் பகைவர்கள்

பங்காளிகள் ஆகின்றனர் !

மறந்து விடின் பகைவர்கள்

பண்புள்ளவர்கள் ஆகின்றனர் !

ஆனால் இக்கலி யுகத்தில்

மன்னிப்பவர்கள் மடையர்கள் என்றும்

மறப்பவர்கள் மதியற்றவர்கள் என்றும்

ஏசுகிறது இவ்வுலகம் ,

மனித நேயம் தடயம்

அற்று போனது !

எத்திசையும் தனதாக்கும்

மனிதனுக்கு இத்திசை எப்படித்தான்

பொருந்தும் ! அன்போடு

அனைவரையும் அரவணைப்போம் !

என்று தான் சங்கமம் ?

கடற்கரையினில் நடந்த போது

அலைகள் என்னிடம் வினவின

வேறெப்படி ?

என் கால்களைத் தழுவியே !

நீங்கள் விழாக்களில்

உறவினர்களுடன் சங்கமிக்கிரீர் !

ஆனால் ஆறுகளோ என்று தான்

அனைத்தும் சங்கமிக்கும் ?

அதன் ஏக்கம் என்று தான் தீரும் !

காகிதத்தையும் வீணாக்காமல்

உபயோகிக்கும் மனிதர்கள்

ஆறுகள் வீணாக என்னுள்

கலப்பதைத் தடுப்பாரோ ???

உபதேசம்

பேச்சினிலே பெருமிதம் ;

நடையில் நாடகம் !

வார்த்தையில் திருவிளையாடல் ;

அவரே தான் அரசியல்வாதி !

பிரச்சாரமோ குழந்தைகளை

வேலையில் அமர்த்தாதீர் என்று !

ஓய்ந்தது பிரச்சாரம் ; பறந்தார்

வீட்டிற்கு ஓய்வெடுக்க ;

தேநீர் கொடுக்கிறான் அவர் தொழிலாளியாக

நியமித்திருந்த சிறுவன் !

நேரம்

கதிரவக் கதிர்களை கதிர்கள்

கண்டறியும் முன்பே

கயல் போன்ற கண்களை விழித்து

மாக்கோலத்தால் வாசலை வசீகரித்து

எவரும் கை படா நீரில் என் கை

மட்டுமே பட்ட மேனியை

நீராடிவிட்டு காமதேனுவின் அமுதினை

ஐயம் ! எதற்கு ? உன் கை பட்டதால்

கறந்த பாலும் அமுதானது

காய்ச்சி எடுத்து கூந்தலில் படர்ந்த

நீரினை உதிர்த்து என் துயில் களைக்கிறாய் ;

விழித்ததும் வியந்தேன் ! உதிர்ந்தது

கூந்தலின் நீரல்ல ; நீரினைத் தெளித்தது

கடும் சினம் கொண்டு

என்னைக் கரு கொண்டவள் ;

ஆம் நான் விழித்தது கதிரவன்

அஸ்தமனம் ஆகும் சமயம் !

காதலுக்கு கண்ணும் இல்லை ;

கனவிற்கு நேரமும் இல்லை !

சிதறல்

வீழ்வதெல்லாம் எழுவதற்கே !
எழுவதெல்லாம் வெல்வதற்கே !
வெல்வதெல்லாம் கற்பதற்கே !
கற்பதெல்லாம் கற்பிப்பதற்கே !

தோட்டத்தில் பூக்கள்
வாடாமல் இராது ;
வாழ்வில் தோல்விகள்
வராமல் இராது ;

முடவன் முயல முடியாது ;
சரித்திரம் சரிய முடியாது ;
வாழ்க்கையை வீணாக்க முடியாது ;

நம்பிக்கை வை
நம்பிக்கை மீதல்ல
நம்பி கையை வை
எவன் மீதோ அல்ல
உன் மீது...