புதன், 15 டிசம்பர், 2010

கை !!!

என்னை பெற்ற‌வளின் கையை
நான் பிடித்து ந‌ட‌ந்தேன்,
என்றும் உட‌ன் இருப்பேன்
என்று அவ‌ள் நெகிழ !

என்னை ஏற்ற‌வ‌ளின் கை
என்னை பிடிக்க‌ ந‌டந்தேன்,
என்றும் துணை இருப்பேன்
என்று அவ‌ள் ம‌கிழ‌!!!

வியாழன், 9 டிசம்பர், 2010

வாழ்க்கைய‌டா!!!

வ‌ருவ‌தை தேடி,
இருப்ப‌தை துற‌ந்து,
பற‌க்கின்ற‌ உல‌கினில்,
ஓட‌த் துடித்து,
ந‌டந்து கொண்டிருக்கும்,
வாழ்க்கைய‌டா!!!

புதன், 24 நவம்பர், 2010

மூச்சு!

அந்த‌, நீல‌ வான‌த்தின் மேல்
என்ன‌ என்ன‌மோ இருக்கிற‌து ,
இருப்ப‌தாக‌ இருக்கிற‌து
விஞ்ஞானியின் பேச்சு,

இந்த‌ நீல‌ வான‌த்தின்
கீழ்நாம் இருவ‌ரும், இருவ‌ர் ம‌ட்டுமே
இருப்பதாக‌ நினைக்கிற‌து
இச்சாமானிய‌னின் மூச்சு !

புதன், 17 நவம்பர், 2010

போற்றிடும் உல‌க‌ம்!

சில‌ந்தியின் வ‌லையினைப் போல்

சித‌ற‌ல்க‌ளாய் க‌ன‌வினை சேர்க்கும்

அப்பாவிகளாய் நாம் இருக்கையில்,

இருந்த‌ இட‌த்தில் இறையினை

இழுத்துவிடும் த‌வ‌ளைக‌ளை

மேதாவிக‌ளாய் போற்றிடும் உல‌க‌ம்!

செவ்வாய், 26 அக்டோபர், 2010

தியாக‌ம் !!!

ம‌ன‌ம் விரும்பி இழ‌ப்ப‌தா?

இழ‌ந்த‌தை நினைக்காம‌ல் இருப்ப‌தா?

இழ‌ந்த‌தை தாங்கும் ச‌க்தியா?

புண்ணிய‌த்தின் தேட‌லா?

க‌ண்ணிய‌த்தின் காண‌லா?

திங்கள், 27 செப்டம்பர், 2010

நிலவை பிடித்தேன் !!!

பயமறியா வயதினில்,
நிலவே உன்னை பின்தொடர்ந்து
எந்தன் வீட்டினில் சேர்த்து அனைப்பேன் ; ஆனால்
ஆதங்கப்பட்ட ஆதவன் உதித்து
உன்னை பறித்து கொள்வான் ;
சற்று வருந்துவேன் மீண்டும்
மாலை வரும் வரையினில் ;
இனி வருந்தப் போவதில்லை ,
நிலவு எனை பிரியப் போவதில்லை ;
மனையாளாய் எந்தன் மனை ஆள்கிறாள் !!!

புதன், 22 செப்டம்பர், 2010

அளவுகோல்

அளவுக்கு மிஞ்சிவிடில்

அமிர்தமும் நஞ்சாகுமே !

உந்தன் மீது நான் வைத்த

அளவினை கடந்த அன்பு

என்னுள் நான் என்ற

அகந்தையினை நசுக்கி விட்டது !

நான் வைத்த அன்பு

உந்தன் மேல் என்பதால்

அளவுகோலும் அளப்பதை மறந்தது !

செவ்வாய், 7 செப்டம்பர், 2010

மழையோடு ஓர் பொழுது !

என் வாழ்வினில் பல பொழுதுகள் ,
என்னவளுடன் எண்ணற்ற பொழுதுகள் ,
உன்னுடன் இந்த பொழுது !


அவளிடமும் சொன்னதில்லை
நீ தான் என் முதல் காதலி என்று,
கோவித்துக் கொள்வாள் கள்ளி ;


உங்கள் இருவருடனும் ஒரே சமயத்தினில்
காதல் செய்திட எண்ணிய ஆசை தீர்ந்தன ,
இந்த பொழுதினில் ;


உன் முதல் துளி
என்னை தழுவியதும் - மெய்சிலிர்த்தேன் ;
நானும் உன் பின்
வந்துவிடுவேனோ என்ற அச்சத்தினால்
அவளை மறந்து என் கை பிணைத்தாள்,
பிறகென்ன நானும் எனை மறந்தேன் ;

நீ என் மேனி தழுவ ,
அவள் அன்பு என் உள்ளம் தழுவ ,
விலை மதிப்பில்லா பொழுதின் சொந்தக்காரன் ,
கர்வத்தில் கர்ஜித்து ,
வினாடியும் வீணடிக்க விருப்பமில்லை ,


ஓர் குடையினில் கீழ் நடந்திருந்தால்
கவனம் சிதறி இருக்கும் , மழை துளி
அவள் மேல் படாமல் தடுப்பதில் ;


நான் ரசித்தவள் எனை அணைக்க ,
நான் நேசித்தவள் என் கை பிணைக்க ,
எங்கள் பாதங்கள் நடை பயின்றன !


இதே நொடி என்றாவது கிடைக்கலாம் ,
கிடைத்த இந்த நொடி எனக்கான பரிசு ,
பொக்கிஷம் என்று உயர்த்தி இருப்பேன் - ஆனால்
அது வாழ்வில் ஒரு முறை கிடைப்பது !


பல பொழுதுகளை ஏங்கும் நெஞ்சத்துடன்
விடை கொடுக்கிறேன்
நீ மீண்டும் வருவாய் என !

ஞாயிறு, 15 ஆகஸ்ட், 2010

வேட்கை

சுத‌ந்திர‌ம் அடைந்திட்ட‌ வேட்கை கண்டிலேன்;
குதூக‌ள‌ம் அடையும் வேடிக்கை காண்கிறேன்;
வேட்கை விடுத்து வேடிக்கை தேடிடும் இக்கால‌ம்,
வேடிக்கைக்கு இல்லை அக்கால‌ வேட்கை,
அக்கால‌ க‌ன‌வினை இக்கால‌த்தில் உழைத்திட்டு,
எக்கால‌மும் பொற்கால‌ம் ஆக்குவோம்;
இச்சுதந்திர‌ தின‌த்தில் வேட்கையை வேறூற்றுவொம்!

ஞாயிறு, 18 ஜூலை, 2010

தனிமை!

என்னை சுற்றி இருந்த
வெறுமை தான் தனிமையோ !
என்னை எனக்கு அறிய
வைத்த நிலைமை இனிமையே !

நினைத்ததை செய்தவனை
செய்வதை நினைக்க வைத்த அருமை !
எதையும் செய்யும் சுதந்திரம் ஆனால்
அதன் வெறுமை தருத்திரம் கொடுமை !

தனிமை வாழ்வினில் வரலாம்
ஒரு வேளையினில்- இடைவேளையிலே !!!

வியாழன், 15 ஜூலை, 2010

கொண்டாடுவோம் குதூகலிப்போம் !

யாதும் ஊரே யாவரும் கேளிர் ,

சொன்னது யாரு அதை புரிவது யாரு

நாம் மட்டும் அதை அறிந்தோமா

இல்லை புரிந்தோமா ?

ஆனால் வாழ்தோம்

கேளிக்கையுடன் கேளிராய் ,

சண்டை போட்டு சகோதரனாய்

சச்சரவுகள் இருந்தும்

நாம் மாமன் மச்சான்கள் !


கல்லூரி சாலையில் நாம்

கால் பதித்து,

எட்டு ஆண்டுகள் கழிந்தாலும்

எட்டு திக்கும் அதன் நினைவுகள்

மகிழ்ச்சியை வென்சாமரமாய் வீசுகிறது ;


நினைவுகள் நினைப்பதற்கே ,

சுகமான கல்லூரி நினைவுகளை

இந்நாளில் எந்நாளும் நினைத்து

கொண்டாடுவோம் குதூகலிப்போம்!

(ஜூலை , 15, 2002, நாங்கள் கல்லூரியினில் கால் பதித்த தினத்தின் கொண்டாட்ட சிதறல் )

வெள்ளி, 25 ஜூன், 2010

வல்லவன்

உம்மை யாம் பார்த்ததும் இல்லை,
உன்னுடன் பேசியதும் இல்லை ,
நீ பேச நான் கேட்டதும் இல்லை ;

என்னை உன் சிந்தனை கவர்ந்தது ,
உன் எழுத்துக்கள் வீழ்த்தியது ,

இன்று புலவன் என்பவரின்,
ஐயம் தீர்த்த ஐயன் நீ ;

எம் தாய் மொழி இன்று செம்மொழி
அதனை நன் மொழியாக்கியவன் நீ ;

நீ சொல்லிடாத தலைப்புக்கள் இல்லை ,
அதை புகழ்ந்திடாத நாவும் இல்லை ,
அதனை எதிர்திடும் சமயம் உண்டோ !

உன் எழுத்தின் சுவை அறிய ,
தமிழை அறிந்தனர் அறிஞர் பலர் ,
தமிழின் வலிமை ஏற்றிய வல்லவன் நீ,
உன்னை வள்ளுவன் என்பவன் நான் ;

நான் தமிழன் என்ற கர்வத்தை விட ,
நீவீர் தமிழன் என்பதில் பெருமை
கொள்ளும் சாமான்யன் ;

உன்னை பெருமைபடுத்த
நான் கூறும் வார்த்தை
உன் புகழின் முன் சிறுமையே !

இது உமக்கு என் சமர்ப்பணம் ,
என்றும் தமிழில் உண்டு
உனக்கு ஓர் சிம்மாசனம் !

செவ்வாய், 1 ஜூன், 2010

அரசியல் , அரசியலா

அரசியல் ,
அரிசியிலும் வந்தாச்சு ,
குழைத்திடும் குரனையாய் ;
படிப்பிலும் புகுந்தாச்சு ,
கொட்டிடும் தேளாய் ;
மக்களும் ஏமாந்தாச்சு,
தேர்தல் எனும் பெயரால் ;
கட்சியும் மாறியாச்சு ,
காட்சியில் மாற்றம் இல்லை ;
சொற்கள் பல கேட்டாச்சு ,
பொருள் ஏதும் விளங்க வில்லை ;


அரசியல் ,
அரசால் இயலும் ;
என்ற நம்பிக்கை ,
அரசியலா? ,
அரசால் இயலுமா ?
என்று சிதைந்தாச்சு ;


அரசியலா ,
பலரும் இதை பேசியாச்சு ,
எங்கும் இல்லை முன்னேற்றம் ;
ரொம்பவும் ஏங்கியாச்சு ,
எங்காவது எதிலாவது
வருமா முன்னேற்றம் !

ஞாயிறு, 30 மே, 2010

மாற்றம்

மாற்றத்தினால் ,
சிலருக்கு ஏமாற்றம் ,
சில சமயம் தடுமாற்றம் ;

மாற்றம்,
மாற்றிடுமே சிலரது தோற்றத்தை,
பெற்றிடுமே சிலருக்கு ஏற்றத்தை ;

மாற்றத்தினால்,
மாறலாம் நமது சுற்றம் ,
மாறிவிடும் வாழ்வின் ஓட்டம் ;

மாற்றம் ,
மாற்றிடுமே அனைத்தையும் ஆனால் ,
மாற்றம் என்றுமே மாறாதது ;

வியாழன், 6 மே, 2010

என் உயிரானவள் !

வெகு தூர இரயில் பயணம் ,
எனக்கு பயணம் புதிதல்ல ,
தூரம் கண்டு அச்சம் இல்லை ,
சற்று சலனம் நீ இன்றி பயணிக்க ;
உன்னை அறிந்த பின்பு !

என் பாதையில்
முட்கள் இருப்பினும்
என்னுடன் வர சம்மதித்தாய் !

இனி நீ இன்றி
வாழ்க்கை பயணிப்பதில்
அர்த்தம் யாம் அறியேன் ,

உன்னை அறியும் முன்பும் பயணித்தேன்
உன்னை காணும் நாளை எண்ணி ,
அதில் ஓர் சுகம் !

இன்று உன்னை நினைத்து
பயணிக்கையிலும் ஒரு சுகம்
ஆனால் அதனை உணர மறுக்கிறேன் !

கடவுள் இல்லை என்றில்லை,
இருந்தால் சுகம், என்று
உரைக்கு மாற்றுரை வழங்க
நான் நாத்திகன் இல்லை !

இருக்கும் இருக்கலாம்
என்று மூடனாய் நம்பிக்கை
கொள்ள ஆத்திகனும் இல்லை !

உயிர் உள்ள வரை
இதய துடிப்பு
நீ உள்ள வரை நான் !
என்றிருக்கும்
எனக்கு உயிரானவள் நீ !

சனி, 17 ஏப்ரல், 2010

பெருமை !!!

எந்தன் பெயரை உரிமையுடன்

நீ அழைத்ததோ அருமை !

உந்தன் தோழி எனை யார்

என்கையில் நீ புன்னகைத்ததும்

என் நெஞ்சில் ஓர் பெருமை !!

வெள்ளி, 16 ஏப்ரல், 2010

இனிமை

எந்தன் கைபேசியின் கை வந்து,

வாய் அடைக்கும் வரை பேச சொல்லுது

அவளது குரலின் இனிமை !

வெள்ளி, 2 ஏப்ரல், 2010

வினாவானேன் !

காதல் என்பது என்னுள்
கேள்வியாக இருந்த போது,
விடையாய் வந்தாய் !

பலர் எனை எதிர்த்தனர்
நான் உன்னை
எதிர் பார்த்தால் !

உன்னை கண்டதும்
எனை இழந்தேன்
என்னிடமிருந்து !

அன்று உன்னால் லயித்த
காரணம் என்னிடம் இல்லை
தேவையும் இல்லை நீ இருப்பதால் !

எதிர்பார்க்கவில்லை நீ
எனை பிரிவாய் என , கனவிலும்
காணவில்லை !

இன்று என்னை பிரிந்த
காரணம் உன்னிடம் இல்லை
தேவையும் இல்லை நீயே சென்ற பின் ;

வாழ்வின் விடை கண்ட பின்
என்னை அதன் வினாவாக்கினாய்
என்னுள் நானே வினாவானேன் !

செவ்வாய், 16 மார்ச், 2010

உனக்காக பிறந்தவன் !

காதல் என்பது உணர்வாயினும்
என் உயிரில் கலந்தாய் ;

கலந்தது என் உயிர் என்றாலும்
என் நினைவில் நிறைந்தாய் ;

நினைவில் நிறைந்திருப்பினும்
என் கண்கள் உனையே தேடின;

கண்கள் உன்னை தேடுகையில்
என் உதடுகள் உன் பெயரையே உச்சரித்தன ;

உதடுகள் பெயரை உச்சரிக்கையில்
என் கைகள் இதனை சிதறின நீ படிப்பாய் என ;

நீ இதனை படிக்கையில்
என்னை அறிந்திருப்பாய் ;

அறிந்ததும் உணர்ந்திருப்பாய்
உனக்காக பிறந்தவன் என்று !

சனி, 6 மார்ச், 2010

ரசிகன் ஆனேன் !

வழி மீது விழி வைத்தேன் ,
அவள் வருகைக்கு !
என் விழி எங்கும் அவள் பிம்பம் ;

சற்றே கவனித்தேன் ,
அவள் பாதம் படவே வழியும்
எங்கும் ஏங்கி இருந்தது !

வியந்தேன், மகிழ்ந்தேன் !

அவள் வருகைக்கு காத்திருந்த
நிமிடமும் யுகமானது ஆயினும்
அந்த யுகம் முழுவதும்
அவளை நினைத்து கொண்டிருப்பதால்
அதையும் ரசித்தேன் !

ரசிகன் ஆனேன் !

வியாழன், 11 பிப்ரவரி, 2010

என் தோழியிடம் !!!

தாய்க்கு பின்னும்
தாரத்திற்கு முன்னும், என்றும் !
தாயின் அரவணைப்புடன்
என்னவளின் கண்டிப்புடன்
என்னை வழி நடத்தும் சுடராய் !

எனக்கு தோள் கொடுக்க தோழர்கள்
பலர் இருப்பினும் ,
விரக்தியினில் எனையறியாமல்
வரும் கண்ணீர் துடைக்க
ஓர் கை - உந்தன் கை வேண்டும் எனக்கு !

எனது கோரிக்கைகளை மட்டும்
சொல்கிறேன் என்றில்லை ,
தோழியை நேசித்து அவளிடம்
யாசிக்கும் தோழன் இவன் !
தந்தையாய் பாதுகாத்து தாயுமானவனாய்
அனைத்துமாய் தோழனுமாய் இருப்பேன் !

காதலர் தினத்தினில்
என் நட்பை காதலிப்பாயாக
இதுவும் ஓர் தோழனின் யாசகம்
என் தோழியிடம் !!!

வெள்ளி, 5 பிப்ரவரி, 2010

எவரும் இலர் !

என் பார்வை சிதறியதால்
உன்னை கண்டேன் என்றிருந்தேன் ,
ஆயின் ,
என்னை நினைக்க தவறியது
என் உள்ளம், உன்னால் கவர்ந்து ;

பல கோடி கவிதைகள் சிதறியது
என்னிடம், - உனக்காக ;
அதை படித்ததும் பதறலாம்,
இக்கிறுக்க‌னின் கவிதையும்
பல கவிஞர்களின் கவிதை
போல் உள்ளதென !

இருக்கலாம், நான் ஒன்றும்
தமிழ் அறிஞன் அல்ல
நான் உன்னை அறிந்தவன் ;

அவர்களை போல் நானும்
காதலை சொல்லி இருக்கலாம் ;
ஆனால்
என்னை போல் உன்னை காதலிக்க
எவரும் இலர் !

வியாழன், 4 பிப்ரவரி, 2010

கொண்டாடுவோம் !

வெற்றி என்ற போதையை

தலைக்கு ஏற்றாமல் ,

தோல்வியின் தாக்கத்தில்

தடம் புரளாமல் ,

காதல் என்ற இளஞ்சாரலில்

இளைப்பாறினால் தவறேது ;

நட்புடன் நடை போட்டாலும் ,

பிறந்து விட்டோம் என்று வாழாமல் ,

வாழ்வதற்கே பிறந்தோம் ,

அதுவும் வெல்வதற்கே ! என்று

வாழ்வினை கொண்டாடுவோம் !

வியாழன், 28 ஜனவரி, 2010

கற்போம் !!!

சரித்திரம் படிக்க கற்றோம்,
அதனை படைக்க கற்போம்;

இயற்கையை ரசிக்க கற்றோம்,
அதனை பாதுகாக்க கற்போம்;

வாழ்க்கையை வாழ கற்றோம்,
அதனை வெல்ல கற்போம்;

எதிரியை மன்னிக்க கற்றோம்,
துரோகியை மறக்க கற்போம்;

காதலியை நேசிக்க கற்றோம்,
காதலை சுவாசிக்க கற்போம்;

கற்றதோ கடுகளவு , கற்க வேண்டியவை
கடலளவு ஆயினும் கற்போம் !!!

திங்கள், 25 ஜனவரி, 2010

பயணங்கள் முடிவதில்லை !!1

இரயில் சிநேகிதமும்
ஓர் மலரன்றோ !
ஏனெனில் அவை வெகு காலம்
இருப்பதில்லையே !

மலர்களிலே குறிஞ்சி மலரும்
இருப்பது போல் ,
இரயில் சிநேகிததில்
குறிஞ்சி மலரும் பூப்பதுண்டு !
அம்மலருக்கும் விட்டில் பூச்சியின்
வாழ்வே தான் !

என்றேனும் நட்பு எனும் பூ
மலர்ந்து விட்டால் என்றென்றும்
அந்த பயணங்கள் முடிவதில்லை !!!

ஞாயிறு, 10 ஜனவரி, 2010

ஒற்றை வார்த்தை !!!

உயிரே !
ஒற்றை வார்த்தை
கவிதையானது
உந்தன் பெயர் எனக்கு !

அன்பே !
என்னை முற்றிலும்
ஆக்கிரமித்த ஒற்றை
உயிர் நீயடி !

சகியே !
உலகினில் காதலை சொல்ல
வார்த்தைகள் பல தேவைப்படுகையில்
"காதலிக்கிறேன்" என்ற ஒற்றை வார்த்தை
போதுமடி எனக்கு !

ஆம் ,
நான் காதலிக்கிறேன்
என்ற போது,
உன்னை தவிர வேறு
யாராக தான் இருக்க முடியும் !

ஒற்றை வார்த்தையில்
என் ஒற்றை வாழ்க்கையை
சொல்லிவிடுகிறேன் "நீ" என்று !