செவ்வாய், 30 டிசம்பர், 2008

இயலாமல் போகுமா ?

ஏமாற்றம் ஏணிப்படிகளே !

எதிர்பார்ப்பு எதற்கு ? எதிர்த்து நிற்போம் ,

தோல்வியை தோற்கடிப்போம் ;

செல்லும் இடத்தைக் காட்டும்

மைல் கல்லே - வெற்றிகள் ;

வெற்றியை வென்றால் தான்

இலக்கை அடைய முடியும் !

நான் குழப்பவில்லை , புரியவில்லையா ?

தெரிந்துகொள் , வெற்றியின் களிப்பில்

கர்வம் கரைப் புரண்டு தலைக்கேறிவிடும்,

அதனை வென்றுவிட்டால் இலக்கினை

அடைவது இயலாமல் போகுமா ?

செவ்வாய், 9 டிசம்பர், 2008

ஏன் இல்லை மனமே ?

ஏழு கடல் தாண்டி இருக்கும்

மலைகள் தாண்டி , உழைக்க

நம்மை வருத்தி செல்கிறோம் ;

ஒற்றை தமிழ் சொல் கேட்டுவிட்டால்

அமிர்தத்தை வென்ற அமரர்கள் போல்

முகம் மலர்கிறோம் ! ஆனால்

கண் பார்வைக்கு எட்டியும் ,

நம் கை துடைக்கும் தொலைவில் இருந்தும்

அங்கே துடிக்கும் ஈழத்தமிழனுக்கு

கை கொடுக்க ஏன் இல்லை மனமே ?

திங்கள், 1 டிசம்பர், 2008

பாசம்

கடற்கரை மணலில்,

கையினை கெட்டியாக பிடிக்குமாறு,

சொன்ன பெற்றோரை பார்த்து

தனக்கு தானே சொல்லிக் கொண்டது ,

பிடித்துக் கொள்கிறேன்;

நான் தொலைந்து விடுவேன்,

என்பதற்கு இல்லை ;

இறுதிவரையில் உங்களுடன் வந்து

துணை நிற்பதற்கே !

திங்கள், 10 நவம்பர், 2008

வார்த்தை

நாணயத்தின் இரு பக்கங்கள்

போலத் தான் இரு முகம் கொண்டது , காதல் !

வென்றவரும் , சென்றவரும் ,

ஏனெனில் தோற்பவன் இல்லை !

காத்திருக்க முடியாமல் சென்றவன் தான் !

அப்படி சென்றவன் (தோற்றவன்) இருப்பின் ,

இதோ !

அவனது வரிகள் ,

உன்னை என் வாழ்க்கை புத்தகத்தில்

பக்கங்களாக்க கருதினேன் , நீயோ

ஒரு பாடமாக இருக்கிறேன்

என்று நழுவிவிட்டாய் !

இதோ !

வென்றவன் வரிகள் ,

அவருக்கு ஏது வரிகள் ,

வார்த்தை தான் ' வாழ்வோம் '

என்ற சொல் !

வியாழன், 30 அக்டோபர், 2008

மருந்து

என்ன தான் அடி ! காதல் ,
என்னைத் தருகிறேன் என்று
என்னைத் தொலைக்கிறேன் ;
தொலைப்பதை விரும்பி , அறிந்து,
தருவது போல் தொலைகிறேன் ;
இதுவும் சுகமே !
வயதை தொலைத்து அனுபவம் அடைகிறோம் ;
நானோ உன்னை அடைகிறேன் !
இது போதாத எனக்கு ,
போதும் என்ற மனமே
பொன் செய் மருந்தல்லவா !

திங்கள், 6 அக்டோபர், 2008

அகரம் ! .......

அதிசயங்களை அனுபவிக்கவில்லை ;

அதிசயங்கள் அதிசயிக்கவில்லை ;

அறிவதெதற்கு !

அதிசயங்களும் அதிசயக்கும் அதிசயம் ;

அட அருமை !

அவள் அருகினில் அமர்ந்திருப்பதாலே

அடியேன், அறிவேன் .......

செவ்வாய், 23 செப்டம்பர், 2008

சிந்தனை

சற்று சிந்தனையில் ஆழ்ந்திருந்தேன் !

புலவர்கள் திறமைகள் பல பெற்றும்

வறுமையினால் யாசிக்கின்றனர் !

நான் ராஜா வீட்டுக் கன்றுக்குட்டி இல்லை ;

என் வீட்டிற்கு நானே ராஜா !

இருந்தும் யாசிக்கிறேன் ,

வேறு யாரிமும் இல்லை உன்னிடம் தான் !

வறுமையினாலா ? இல்லை ,

மன வெறுமையினால் !

என் மனதில் நிரம்புவாயா ?

திங்கள், 15 செப்டம்பர், 2008

அனுபவம்

அனுபவம் தான் நம்மில் ஆண்டவனை

அவதரிக்க செய்யும் என்று

அறிவுறுத்தினாய்; காதல் அனுபவம்

இல்லை என்றிருந்தேன் ,

அதனை போக்கவே தான் காதலை

அனுபவிக்கவிட்டு பிரிகிறாயா ?

இனி ஒரு போதும் பெற மாட்டேன்

இந்த அனுபவத்தை !

திங்கள், 8 செப்டம்பர், 2008

நினைவுகள்

நீ அறிந்தவர்கள் பலர் !
அவர்களுக்கு நீயோ ,
அவர்கள் அறிந்த பலருள், நீயும் ஒருத்தி !
ஆனால் எனக்கோ, நான் அறிந்த
சிலருள் கிடைத்த பொக்கிஷம் நீ !

அவர்கள் உன்னை நினைப்பதை பற்றி
நீ நினைத்ததும் இல்லை !
நினைக்க போவதும் இல்லை !!

நீ என்னை பற்றி நினைத்திருக்க மாட்டாய் ,
நீ ஏன் என்னை நினைக்கவில்லை ,
என்பதனை பற்றி நான் சிந்தித்ததும் இல்லை !
சிந்திக்க போவதும் இல்லை ;
நீ என்னை ஏன் என்று கேட்டால்
' நேரம் இல்லை ! ' என்பது தான் என் பதில் ;

ஆம், கண் இமைகள் சில சமயம்
இமைக்க மறக்கலாம், என் இதயமோ
உன்னை நினைக்க மறக்காது ;
என்றென்றும் உன்னை நினைத்துக்
கொண்டிருப்பதால் மற்றவை பற்றி
சிந்திக்க நேரம் தான் ஏது !!!

உன்னை நினைத்து கொண்டிருக்கையில்
மற்றவை எனக்கு எதற்கு ???

ஞாயிறு, 24 ஆகஸ்ட், 2008

மன்னர்கள் ஆவோம் !

நிஜங்களுக்கு அதன் நிழலே சாட்சி !
நம் நினைவுகளுக்கோ உதடுகள்
பிளந்து பூக்கும் புன்னகை தான் !
புன்னைகை மன்னர்கள் ஆவோம் !
சிரித்து வாழ்வோம் !!!

புதன், 20 ஆகஸ்ட், 2008

பொறுப்பில்லாதவன்

இவ்வுலகத்தினை ஒரு நொடி நினைத்திட

உள்ள விஷயங்களோ பல கோடி ;

இன்றைய விலைவாசி உயர்வினில்

என் ஒரு நொடியின் விலையோ பல கோடி ;

அலைகிறேன்! என் நிலை தேடி ,

பின் எப்படி கிடைக்கும் நாட்டை நினைத்திட

ஒரு நொடி ! .....

என்னை பொறுப்பில்லாதவன் என்றனர்

தன் நிலை அறியாமல் தெருக்கோடியில்

நின்றோர் !!!

ஞாயிறு, 17 ஆகஸ்ட், 2008

குறை

காதலை அனுபவித்தவர் பலர் ,
சற்று வித்தியாசத்திற்கு அதனை
ஆராய முயற்சிக்கிறேன் !
காதலால் தோற்று வெறுமை ஆனவர்
உண்டோ ? என்பதற்கு உண்டு !
இதனைச் சொல்பவர் இல்லாமல் இல்லை
அவர்களுக்கு இதோ ,
காதலால் நிச்சயம் இருக்க‌ முடியாது;
நீ நேசிப்பவரால் இருக்கலாம்
ஏனெனில் காதல் குற்றம் அறியாது,
பயமும் அறியாது ;
காதலில் தோல்வி அடைய பரீட்சை இல்லை ,
உணரும் உணர்ச்சியாகும் , உணர முடியவில்லை எனில்,
உன்னில் தான் குறை
பின்பு காதலை குறை சொல்வது ஏன் ?

மொழி

ஒரு கவிதையினை எழுதுவதற்கு

பல வார்த்தைகளை தேடி தவித்த நான் ,

உன்னுடன் பேசும் போது தவித்ததில்லை , ஆம்

மௌனமே மொழியானது !

வெள்ளி, 15 ஆகஸ்ட், 2008

தாய் மண்ணே வணக்கம் !!!

என்னவளே !!!
நீ புன்னகைத்தாலும்,
இல்லை புறக்கணித்தாலும் ;
இறுதியில் ஆறடி மண்ணை முத்தமிட்டாலும்,
இல்லை சாம்பலாய்
தீக்கு இறையாகினாலும்;
தாய் மண்ணே என்னை தாங்க போகிறாள்
எனவே என்றும் உனக்காக எழுதியவன்
இன்று தாய் மண்ணுக்கு வைக்கிறேன்
என் வீர வணக்கங்களை !!!
தாய் மண்ணே வணக்கம் !!!

ஞாயிறு, 10 ஆகஸ்ட், 2008

பாராட்டு

என் இரவும் நீண்டது ,

என் எழுத்தும் தொடர்ந்தது ,

சிந்தனை சிறகடித்தது ,

படித்துவிட்டு பாராட்டுக்கள் பறந்தன ;

ஆனால் நான் பெரிதும் விரும்பும்

உனது பாராட்டு எனக்கு இல்லை

ஏனெனில் நான் எழுதியது

உன் பிரிவைப் பற்றித் தானே !!!

வியாழன், 7 ஆகஸ்ட், 2008

உன்னையே மறந்தேன் !

காதலிக்கும் போது என்னை மறந்தவன் ,

கவிதையாய் கிறுக்கும் போது உன்னை மறந்தேன் ;

பதறாதே ! நான் கிறுக்குவது தோழியைப் பற்றியது ;

காதலிப்பவள் தோழியைவிட சிறியவளா ?

என வினவலாம் ;

நீ தோழியாய் தோள் கொடுத்ததை விட

காதலியாய் என் காதினைப் பிடித்து சினுங்கியதே

நினைவிற்கு வருகிறது நான் என்ன செய்வேன் !

காதலை சொல்லும் முன் உன் தோழியுடன்

பேசினால் , பேசவிட்டு என்னை ஆராய்ந்த நீ ;

உன்னை காதலிக்கும் போது உன் தோழியுடன்

பேசினால் ஏன் எங்கள் உறவை ஆராய்கிறாய் ;

நட்பு தான்

காதலில் உன் உயிரை பறிகொடுப்பாய்

நட்பில் அதனை விட்டுக் கொடுக்க முடியும் ;

காதலில் கனவையும் வீணடிப்பாய்

நட்பில் சாகும் வரை சலிக்கமட்டாய் - வாழ்வதற்கு ;

அடுத்தவன் காலில் விழும் தருணத்தைத்

தாங்கிப் பிடிக்கும் நட்பு - ஆனால்

மானங் கெட வைத்து விடும் காமங் கொண்ட காதல் ;

காலத்தின் காலினை வாரிவிட்டு காலனைக்

கதவின் முன் நிறுத்தும் காதலைக் காதலும் கேட்காதே ;

நலம் கொழிக்கும் நடப்பினை போற்றுவோம்

நட்பை இருப்போம்; நட்போடு வாழ்வோம் !

விழித்தெழு தோழா !

ஏன் ? என்று கேட்டுவிட்டால் புரட்சி ;
நாம் ஒன்று சேர்ந்துவிட்டால் வளர்ச்சி ;
நமக்கு இல்லையே தளர்ச்சி !
தாயின் தலைமகன் என்ற தலைகனத்தை
தகர்த்திவிட்டு தாய்நாட்டை தலை நிமிர்துவோம் வா !
சாதிகள் இல்லையென்ற அறைகூவல் எதற்கு ?
அதனையே ஒழித்துவிடுவோம் வா !
அரசியல் அதிகாரத்திற்கென்று ஆக்கிவிட்டார்கள் ;
அதனையும் அழித்து அகராதி படைப்போம் வா !
காதலில் கால் பதிக்க காலம் பல உள
கங்கை காவிரி கரையை விரிய செய்வோம் வா !
சாதிக்கொரு கட்சி ! மக்கள் நிலைமையோ வறட்சி
வீதிக்கொரு கழகம் ! நமக்கோ கலகம் தான் மிச்சம்
நமது சுதந்திரம் சுற்றித் திரியவா ?
நாட்டில் சுக்கிர திசை வீசுவதற்கே !
பாதையோ வழி மாறுகிறது ; இனி
விழிக்கவில்லை என்றால் பாலைவனத்தில் தான் பாடை ;
உலகம் அதிவேகத்தில் சுழல்கிறது; இனி
வேகமாக நடந்து பயனில்லை !
பறக்க கற்றுக் கொள்வோம் !
தொடங்கிவிட்டோம் இனி நாம் நிற்பது
வெற்றி இலக்கில் தான் !
அறிந்தவற்றை புரிந்து கொள் !

செவ்வாய், 5 ஆகஸ்ட், 2008

உன் தோழனாக ஓர் சிந்தனை

நம் நட்பிலே ஒரு சிறு

இடைவெளி இதற்கு காரணம்

என் பணியா ? ஏதேனும் சதியா ?

இல்லை என் மதி தான் ! ஆம்.

உனக்கு தொல்லை தரக்கூடாது

என்று சொன்னது என் மதி ;

அதனை தயக்கத்துடன் உன் நலனுக்காக

ஏற்றது என் நெஞ்சம்

உனது நெஞ்சம் ஏற்காது நான் அறிவேன்

அதனிடம் உன் மதியுடன் கலந்து

உரையாட சொல் சில நிமிட

மௌனத்தில் என் நட்பை உணர்வாய்

உன் தோழனாக என்றும் !!!

ஆசீர்வதித்தேன் !

என்னை அறியாமலே உன்னை
அறிவது போல் உணர்ந்தேன்;
நீ எனக்கானவள் என்பது உனக்கும்
புரிந்தது ; அது என் கனவில் தான் !
என் மனம் திறந்து காகிதத்தில்
ஆசையினை வார்த்தையாக்கி செதுக்கி
உன் விருப்பம் அறிய வந்தேன் ;
உன் அழகை பார்த்து வியந்தேன் - ஆம் உனது
மணமகள் கோல அழகை பார்த்து தான்
வேறென்ன செய்ய ?
நான் எழுதியது என்னுள் காவியம் என்றாலும்
இப்போ காகிதம் தான் அதனை
கிழித்து விட்டு வீசியெறிந்தேன்
ஆசீர்வதித்தேன் !

திங்கள், 23 ஜூன், 2008

பைத்தியக்காரானா ? அதிர்ஷ்டக்காரானா ?

மறதிக்காரன் ! என்று திட்டிக்

கொண்டிருந்தனர் ; ஆம் கடைக்கு

சென்று வாங்கி வர சொன்ன

இரு பொருளில் ஒன்றை மறந்ததால் !

ஆனால் இன்று பைத்தியக்காரன்

என்கின்றனர் ! உன்னிடம் என்னை

மறந்ததால் ; நானோ

அதிர்ஷ்டக்காரன் என்கிறேன் !

என்னை தந்து உன்னை பெற்றதால் !

படைப்பாளிகள் !

நாம் உண்ணும் உணவிலே

நம் பெயர் எழுதி இருக்குமாம் !

அப்படி இருக்கையில் நமக்கென்று

ஒரு பெண் இல்லாமலா போய்

விடுவாள் ; பிறகு என்ன கவலை

பிரம்மச்சாரிகளே ! நாம் பிரம்மனின்

செல்ல பிள்ளைகள் ஆம் !

சந்தோஷத்தை படைக்கும்

படைப்பாளிகள் !

பிரம்மச்சாரிகள் !

உலகத்தில் பிரம்மன் தன்
படைப்பால் செய்த
தவறுகளுக்கு சொன்ன
Sorry தான் பிரம்மச்சாரிகள் !
வாழ்க்கையை வாழ்ந்து
தான் பார்ப்போம் !

நிழல்

நம்மையும் நம் நிழலையும்
என்றும் பிரிக்க முடியாது ;
ஆனால் மறைய வைக்கலாம் ! ஆம்
பகலில் காணலாம் ; சிறு ஒளியும்
இல்லா இரவினில் எப்படி ?
ஆனால் என் நிழலை
காணலாம் ஆம் ! என் நிழல்
நீ அல்லவா ! உன்
நிலவு முகத்தை மறைய
வைப்பது எப்படி சாத்தியம் ?

செவ்வாய், 27 மே, 2008

சிந்தனை கசியட்டும்

முட்கள் இல்லாத ரோஜாவினை

இவ்வுலகம் நம்பாது; கஷ்டங்கள்

வாழ்க்கையில் வராமல் இராது ;

முட்களுக்கு பயந்தால் ரோஜாவின்

அழகினை அனுபவிக்க முடியுமா ?

துன்பங்களுக்கு துவண்டுவிட்டால்

சுவாசிப்பது எதற்கு ?

சிந்தனை கசியட்டும் லாபம்

சுலபமா வருமா ?

முயற்சிப்போம் முன்னேறுவோம் !!!

எண்ணம்

நிஜங்களை நிழலென நிராகரித்தேன் ;
உண்மையினை உதாசினம் செய்தேன் ;
சிலைகளும் சிரிப்பதாக சிலிர்த்தேன் ;
என்னை நானே அறிய முற்படுகிறேன் ;
மாற்றத்தை எதிர் கொள்கிறவன் , என்னுள்
மாற்றத்தை உணரத் தொடங்கினேன் ;
கேட்பார் பேச்சைக் கேட்காதவன்
பிறர் கேட்குமாறு அறிவிக்கிறேன் - என் காதலை
உனக்கும் கேட்கும் என்று எண்ணியே !!!

ஞாயிறு, 25 மே, 2008

ரசனை

கடும் பாறையினை குடைந்து

தண்ணீர் எடுக்கும் தன்னம்பிக்கை

உள்ளது என்னிடம் !

ஏனோ தெரியவில்லை உன்

கண்ணில் காதல் உள்ளதா ?

என்பதை அறிவதற்கு தயக்கம்

இருக்கத் தானே செய்யும் ;

தண்ணீர் கிடைக்கவில்லை என்றால்

இடமாறிவிடுவேன் ; காதல் இல்லை

என்றால் இடிந்துவிடுவேன் ;

உன்னுடன் வாழாவிட்டாலும் நீ

வாழ்வதை ரசித்தாவது வாழ்ந்துவிடுகிறேன் !!!

பொழுதுபோக்கு

பொழுதினை போக்கவே சில

பிழைகளுடன் கவிதையாக கிறுக்குகிறேன் !

இதனை அறிந்ததும் கேட்கின்றனர்

நான் காதலிப்பது யாரையென்று ?

நான் காதலிப்பது காதல்

என்றால் ஏற்கவா போகிறார்கள் !

வருந்தப் போவதில்லை !

நான் அவர்களுக்காக வாழவில்லை !!!

மந்திரம்

நேரத்தை நேர்த்தியாக நகர்த்தியவன்

நீ என் கண்ணில் நிறைந்த பிறகு

கண்கள் இமைக்க மறந்தன - ஆம் !

இமைக்கும் நேரத்தில் உன்னைப்

பார்க்க முடியாதே ! உனது பெயர்

பணம் என்பதால் தான் பிணமும்

மனம் மாறுகிறதோ !

பணமே ! உன்னையும் பிணமாக்கும்

மந்திரமே - பெண் !!!

சனி, 24 மே, 2008

காணிக்கை

நினைத்தை முடிப்பவன் நான் !
என்று மார்தட்டி கொண்டிருந்தேன் ;
அனைத்திற்கும் முடிவு உண்டு என்பதை
உணர்த்திய நாள் - ஆம்
நான் உன்னை கண்ட நாள் !
யாரையுமே காதலிக்க மாட்டேன்
என்றிருந்த என்னுள் காதல் நெருப்பை
மூட்டிவிட்டாய் ; நெருப்பிருந்தால் புகையுமே !
காதலால் சரணடைய செய்தாய் உன்னிடம்
சவாலை சமாளிப்பேன் ; காதலைக்
காணிக்கை ஆக்குவேன் - என் காதலியிடம் !!!

ஆச்சரியம் .....

உலகினை மயக்கும் அழகு
இல்லை உன்னிடம் - ஆனால்
என்னை மயக்கினாய், உன் அழகில் !
உனது குரல் என்ன குயிலின்
இனிமையா ? நிச்சயம் இல்லை
ஆனால் என்னை வசீகரித்து விட்டதே !
காதலிக்க ஏற்றவளா நீ ?
என்ற கேள்வி மட்டும் கேட்க மாட்டேன் !
காதலுக்கு கண்ணில்லை யாம் அறிவோம் !
கவிஞர்கள் உன்னை கவிதையாய்
எழுத நினைப்பார்களா ? ஆனால்
உன்னை நினைத்து தான் இவற்றை
எழுதினேன் !!! என்ன ஆச்சரியம் .....

வெள்ளி, 23 மே, 2008

முயற்சி

கருவறையில் இருந்து கரையாமல்

காத்து பூமியில் விட்டனர் ;

கல்லறைக்கு போகும் முன்

கற்க முயற்சிக்கிறேன் !

அறிவுரைக்கவில்லை வலியுறுத்துகிறேன் ;

முதுகினில் தட்டி கொடுக்கா விட்டாலும்

தட்டி விடாதீர் !

வியாழன், 22 மே, 2008

அன்புடன்

மறப்போம் ! மன்னிப்போம் !

என்று அறிவுரைத்தனர் ,

மன்னித்தால் தானே மறப்பதற்கு

என்று வாதிடுகின்றனர் !

மன்னித்து விடின் பகைவர்கள்

பங்காளிகள் ஆகின்றனர் !

மறந்து விடின் பகைவர்கள்

பண்புள்ளவர்கள் ஆகின்றனர் !

ஆனால் இக்கலி யுகத்தில்

மன்னிப்பவர்கள் மடையர்கள் என்றும்

மறப்பவர்கள் மதியற்றவர்கள் என்றும்

ஏசுகிறது இவ்வுலகம் ,

மனித நேயம் தடயம்

அற்று போனது !

எத்திசையும் தனதாக்கும்

மனிதனுக்கு இத்திசை எப்படித்தான்

பொருந்தும் ! அன்போடு

அனைவரையும் அரவணைப்போம் !

என்று தான் சங்கமம் ?

கடற்கரையினில் நடந்த போது

அலைகள் என்னிடம் வினவின

வேறெப்படி ?

என் கால்களைத் தழுவியே !

நீங்கள் விழாக்களில்

உறவினர்களுடன் சங்கமிக்கிரீர் !

ஆனால் ஆறுகளோ என்று தான்

அனைத்தும் சங்கமிக்கும் ?

அதன் ஏக்கம் என்று தான் தீரும் !

காகிதத்தையும் வீணாக்காமல்

உபயோகிக்கும் மனிதர்கள்

ஆறுகள் வீணாக என்னுள்

கலப்பதைத் தடுப்பாரோ ???

உபதேசம்

பேச்சினிலே பெருமிதம் ;

நடையில் நாடகம் !

வார்த்தையில் திருவிளையாடல் ;

அவரே தான் அரசியல்வாதி !

பிரச்சாரமோ குழந்தைகளை

வேலையில் அமர்த்தாதீர் என்று !

ஓய்ந்தது பிரச்சாரம் ; பறந்தார்

வீட்டிற்கு ஓய்வெடுக்க ;

தேநீர் கொடுக்கிறான் அவர் தொழிலாளியாக

நியமித்திருந்த சிறுவன் !

நேரம்

கதிரவக் கதிர்களை கதிர்கள்

கண்டறியும் முன்பே

கயல் போன்ற கண்களை விழித்து

மாக்கோலத்தால் வாசலை வசீகரித்து

எவரும் கை படா நீரில் என் கை

மட்டுமே பட்ட மேனியை

நீராடிவிட்டு காமதேனுவின் அமுதினை

ஐயம் ! எதற்கு ? உன் கை பட்டதால்

கறந்த பாலும் அமுதானது

காய்ச்சி எடுத்து கூந்தலில் படர்ந்த

நீரினை உதிர்த்து என் துயில் களைக்கிறாய் ;

விழித்ததும் வியந்தேன் ! உதிர்ந்தது

கூந்தலின் நீரல்ல ; நீரினைத் தெளித்தது

கடும் சினம் கொண்டு

என்னைக் கரு கொண்டவள் ;

ஆம் நான் விழித்தது கதிரவன்

அஸ்தமனம் ஆகும் சமயம் !

காதலுக்கு கண்ணும் இல்லை ;

கனவிற்கு நேரமும் இல்லை !

சிதறல்

வீழ்வதெல்லாம் எழுவதற்கே !
எழுவதெல்லாம் வெல்வதற்கே !
வெல்வதெல்லாம் கற்பதற்கே !
கற்பதெல்லாம் கற்பிப்பதற்கே !

தோட்டத்தில் பூக்கள்
வாடாமல் இராது ;
வாழ்வில் தோல்விகள்
வராமல் இராது ;

முடவன் முயல முடியாது ;
சரித்திரம் சரிய முடியாது ;
வாழ்க்கையை வீணாக்க முடியாது ;

நம்பிக்கை வை
நம்பிக்கை மீதல்ல
நம்பி கையை வை
எவன் மீதோ அல்ல
உன் மீது...